தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம். நளினி சிதம்பரம் உறுதி
- IndiaGlitz, [Monday,August 14 2017]
தமிழகத்தை சேர்ந்த மருத்துவம் படிக்கவுள்ள மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு ஆளும் அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழக அரசு இதுகுறித்து அவசர சட்டம் இயற்றினால் அதற்கு இந்த ஆண்டு மட்டும் ஒத்துழைப்பு தர தயார் என்று மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சற்றுமுன் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரின் மனைவியும், பிரபல வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் கூறியுள்ளார். அவசர சட்டத்தால் இந்த ஆண்டும் மட்டுமாவது விதிவிலக்கு கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைந்த மாணவர்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.