காதலர் தின வாரயிறுதியில் நான்கு தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அவற்றில் ஒன்றாக இன்று ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் 'நாகேஷ் திரையரங்கம்'. 'மாயா' படத்தில் அற்புதமாக நடித்த ஆரி, கோலிவுட்டின் முன்னணி இடத்தை பிடிக்க முயற்சித்து வரும் நாயகி ஆஸ்னா ஜாவேரி நடிப்பில் 'அகடம்' படத்தை இயக்கிய முகமது இசாக் இயக்கிய இந்த 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படம் ரசிகர்களை திருப்தி செய்ததா? என்பதை பார்ப்போம்
கடந்த 90களில் வெளிவந்த படங்களில் உள்ள கதை போல் கஷ்டப்படும் ஒரு ஹீரோ, அவனை காதலிக்கும் ஒரு ஹீரோயின், திருமண வயதில் ஒரு தங்கை, இவர்களில் சோகமே உருவான ஒரு தாய் என சுவாரஸ்யமில்லாத கேரக்டர்களுடன் கதை பயணிக்கின்றது. ஆரி ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். ஆனால் அவருக்கு அந்த தொழிலில் போதுமான வருமானம் இல்லை. தங்கையின் திருமணத்தை நடத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ள ஆரி, தந்தை தனக்காக விட்டு சென்ற பழைய தியேட்டரான நாகேஷ் திரையரங்கை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் அந்த திரையரங்கை விற்பனை செய்ய முயற்சிக்கும்போது அந்த தியேட்டரில் உள்ள பேயால் சிக்கல் ஏற்படுகிறது. அந்த பேய்க்கும் ஆரிக்கும் என்ன தொடர்பு? பேய் ஏன் திரையரங்கை விற்பனை செய்ய தடுக்கின்றது என்பதும் இதற்கு பின்னணியில் ஒரு சமூக விரோதி செய்யும் காரியமும் சஸ்பென்ஸ் ஆக செல்கிறது. இறுதியில் நாகேஷ் திரையரங்கை ஆரி விற்றாரா? தங்கையின் திருமணத்தை நடத்தினாரா? என்பதே மீதி கதை
ஆரி ஒரு திறமையான நடிகர் என்பதை 'மாயா' படம் மூலம் அனைவரும் தெரிந்து கொண்டாலும் இந்த படத்தில் அவருடைய நடிப்பிற்கு தீனி போடும் வகையில் திரைக்கதை வலுவில்லாமல் இருந்தது ஒரு குறையாக உள்ளது. இருப்பினும் முடிந்தவரை ஆரி தனது பெஸ்ட்டை கொடுத்துள்ளார். ஆரி-ஆஸ்னா காதல் காட்சிகளிலும் புதுமை எதுவும் இல்லாததால் ஒரு சாதாரண நாயகியாகவே ஆஸ்னா இந்த படத்தில் வந்து போகிறார். காளிவெங்கட்டின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும் இவரை இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம். அதுல்யாவின் கேரக்டர் ஒரு சர்ப்ரைஸாக இருந்தாலும் அந்த கேரக்டரையும் இயக்குனர் இசாக் வீணடித்திருப்பதாக உணர முடிகிறது
ஒரு நல்ல திகில் படத்திற்கு ஆடியன்ஸ்களை பயமுறுத்தும் எதிர்பாராத காட்சிகள் தான் பலம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த படத்தில் அப்படி ஒரு காட்சி மருந்துக்கு கூட இல்லை. இறுதிக்காட்சியில் வில்லன் யார் என்பது தெரிய வரும்போது மட்டும் ஒரு சின்ன ஆச்சரியம். அதேபோல் முதல் பாதியில் அடல்ட் காமெடி கதையாக கொண்டு செல்லும் இயக்குனர், இரண்டாம் பாதியில் ஒரு நல்ல சமூக கருத்தை சொல்ல முயற்சித்ததற்கு பாராட்டுக்கள்
ஸ்ரீ என பெயரை மாற்றிக்கொண்ட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் குத்துப்பாடல்கள் உள்பட அனைத்து பாடல்களும் சுமார்தான். மேலும் பாடல்கள் அனைத்தும் திரைக்கதையுடன் ஒட்டாமல் இருப்பதும் ஒரு பின்னடைவே. பின்னணி இசையும் ஒரு பேய்ப்படத்திற்கு உரிய பயமுறுத்தல்கள் இல்லை. பட்ஜெட் காரணமாக அமைக்கப்பட்ட சுமாரான கிராபிக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களுக்கு நிச்சயம் திருப்தியை தராது.
மொத்தத்தில் 'நாகேஷ் திரையரங்கம்', இரண்டாம் பாதியின் சமூக கருத்துக்கள், ஆரியின் நல்ல நடிப்பு, காளி வெங்கட்டின் காமெடி காட்சிகள், அதுல்யாவின் கேரக்டர் ஆகியவைகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்
Comments