மீண்டும் திரைக்கு வரும் நாகேஷ் பேரன்.. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,April 12 2024]

தமிழ் திரை உலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ், மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் மிகத் திறமையான நடிகர்களில் ஒருவர் நாகேஷ் என்பதும் அவருடைய நடிப்பை பார்த்து கே பாலச்சந்தர், கமல்ஹாசன் ஆகியோர்களே பொறாமைப்படும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ’தசாவதாரம்’ படத்திற்கு பின் நாகேஷ் காலமான நிலையில் அவரது மகன் ஆனந்த்பாபு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஆனந்த் பாபுவின் மகன் பிஜேஷ், ஏற்கனவே சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்’ என்ற படத்தில் நடித்த நடித்த நிலையில், அந்த படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது.

மேலும் பிரபுதேவா நடித்த ’பொன்மாணிக்கவேல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள பிஜேஷ், தற்போது ’வானரஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிஜேஷ், ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளதாகவும் இந்த படம் அவருக்கு தமிழ் திரை உலகில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரை உலகின் ஜீனியஸ் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ், அவரைப் போல் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.