மதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்!

தன் மீதான வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாட வக்கீல்கள் யாரும் இல்லாததால் தனக்கு சட்ட உதவி கிடைக்கவில்லை என்றும் எனவே தன் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் நாகர்கோவில் காசி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் மட்டுமின்றி தமிழகம் முழுவதையும் பரபரக்க வைத்த வழக்கு நாகர்கோவில் காசி வழக்கு. பெண்களை ஆபாச வீடியோ, நிர்வாண புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்தவை ஆகியவை தொடர்பாக நாகர்கோயில் காசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரி பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வகையிலும், பெண் டாக்டர்கள், பெண் இன்ஜினியர்கள், நடிகரின் மகள்கள், காவல்துறையினர் மகள்கள், தொழிலதிபர்கள் மகள்கள் என நாகர்கோவில் காசியால் ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே போனதாக சொல்லப்பட்டது.

மேலும் நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் இருந்து பல்வேறு ஆதாரங்கள் கிடைத்ததாக சிபிஐ போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நாகர்கோவில் காசிக்கு ஆதரவாக யாரும் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் நாகர்கோவில் காசி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தற்போது நாகர்கோவில் நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கு விசாரணை செய்யப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் எனது தரப்பு வாதங்களை முன்வைக்க எனக்கு சட்ட உதவி செய்வதற்கு வக்கீல்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் எனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

ஒரு தரப்பு சட்ட உதவி இல்லாமல் வழக்கு நடத்துவது ஏற்புடையது அல்ல, அது அடிப்படை உரிமைக்கு எதிரானது கூட. எனவே என் மீதான வழக்குகளை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டுமென்றும், அதுவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட வேன்டும் என்றும் அந்த மனுவில் காசி கூறியுள்ளார். இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.