நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடம் இடிப்பு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!
- IndiaGlitz, [Saturday,August 24 2024]
ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டியதாக நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடம் இன்று காலை இடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான ’என் கன்வென்சன் சென்டர்’ என்ற அரங்கம் ஹைதராபாத்தில் உள்ள நிலையில் இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று காலை திடீரென இடிக்க ஆரம்பித்தது.
இது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்த நடிகர் நாகார்ஜுனா, ‘எனக்கு சொந்தமான கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாக இடிக்கப்படுவதாகவும், இதனால் வேதனை அடைவதாகவும் தெரிவித்தார். அந்த நிலம் ஒரு பட்டா நிலம் என்றும், ஒரு அங்குலம் கூட ஏரி நிலம் ஆக்கிரமிப்பு படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் கட்டிடத்தை இடிப்பது குறித்து எந்தவிதமான முன்னறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் எனக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தால் நானே அந்த கட்டிடத்தை இடித்திருப்பேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் திடீரென கட்டிடம் இடிக்கப்படுவதாகவும் இது குறித்து நீதிமன்றத்தில் நிவாரணம் பெறுவோம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நாகார்ஜுனா கட்டிடத்தை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்துள்ளார். இதனால் கட்டிடம் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.