சமந்தாவுடன் 8 வருடங்கள்: 'மனம்' திறந்த நாக சைதன்யா

சமந்தாவுடன் நாகசைதன்யா நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகி எட்டு வருடங்கள் ஆகியதை அடுத்து அந்த படம் குறித்த தனது மலரும் நினைவுகளை நடிகர் நாக சைதன்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் .

கடந்த 2014ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மனம்’. இந்த படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவருமே இரண்டு வேடத்தில் நடித்து இருந்தார்கள் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் எட்டு வருடங்கள் ஆனதை அடுத்து நாகசைதன்யா தனது மகிழ்ச்சியை விக்ரம்குமார் உடன் இணைந்த புகைப்படத்தை பதிவு செய்து வெளிப்படுத்தியுள்ளார். மேலும் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் விக்ரம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் ’தேங்க்யூ’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நாக சைதன்யா ஜோடியாக ராஷிகன்னா இந்த படத்தில் நடிக்கிறார் என்பதும், இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.