நடிகர் சங்க தேர்தல் முடிவு கூறுவது என்ன?

  • IndiaGlitz, [Monday,October 19 2015]

தென்னிந்திய நடிகர் சங்கத்தை கிட்டத்தட்ட முழுமையாக பாண்டவர் அணி கைப்பற்றிவிட்டது. சரத்குமார் அணியில் நான்கு செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மீதியுள்ள அனைத்து பதவிகளையும் விஷால் அணி கைப்பற்றியுள்ளது.

தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு வரை யார் வெற்றி பெறுவார்கள் என ஊடகங்களினால் கூட சரியாக கணிக்க முடியாத நிலை இருந்தது. சரத்குமார் அணிக்கு நாடக நடிகர்களும், மூத்த நடிகர்களும் ஆதரவு கொடுத்த நிலையில், விஷால் அணிக்கு இளையதலைமுறை நடிகர்கள் முழுமையாக ஆதரவு கொடுத்தனர். இரு அணியினர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில், விஷால் அணியினர்களின் நாவடக்கமும், சரத்குமார் அணியினர்களின் வரம்புமீறிய பேச்சுக்களுமே தேர்தல் முடிவை மாற்றியுள்ளதாக கருத்து நிலவுகிறது.

சரத்குமார் அணியின் சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிம்புவின் பக்குவமற்ற பேச்சு மூத்த நடிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. சரத்குமாரே, சிம்புவின் பேச்சை ஆதரிக்கவில்லை என கூறியதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் தேர்தலுக்கு முந்தைய நாள் ராதாரவியின் ஆபாசம் கலந்த பேச்சு அனைவரையும் குறிப்பாக நடிகைகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

உலகமே போற்றும் நடிகராக விளங்கி வரும் கமல்ஹாசன் குறித்த தேவையற்ற விமர்சனமும் சரத்குமார் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கடைசி வரை பொறுமை காத்து வந்த தலைவர் சரத்குமாரே தேர்தலுக்கு முந்தைய நாள் ஆக்ரோஷமாகவும், கமல்ஹாசன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதையும் யாரும் ரசிக்கவில்லை என்றும், இந்த அணியினர்களின் வரம்புமீறிய பேச்சு நடுநிலையாக இருந்த நடிகர்களை யோசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டவர் அணியினர் கடைசி வரை வரம்பு மீறி பேசாததும், தேர்தல் தினத்தில் தள்ளுமுள்ளு, அடிதடி என்று வந்தபோதுகூட அமைதி காத்ததும், கடுமையான உழைப்புமே அவர்களுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது. இனி பாண்டவர் அணியினர் அடுத்து செய்ய வேண்டியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதுபோல் கொடுத்த வாக்குறுதியை காப்பற்றுவது. அனைவரும் இளைஞர்கள், படித்தவர்கள் என்பதால் ஊழல் இன்றி, புத்துணர்ச்சியோடு தங்களுடை பதவிக்கு பெருமை தேடி தருவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் எழுந்துள்ளது.

கடைசியாக இந்த தேர்தலில் இருந்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில் 'யாகாவராயினும் நா காக்க' என்பதுதான். எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி தோல்வி என்பது சஜகம்தான். ஆனால் எல்லை மீறிய பேச்சு நெருங்கி வரும் வெற்றியையும் தடுத்துவிடும் என்பது நடிகர் சங்க தேர்தல் ஒரு சிறந்த உதாரணம்.

More News

சரத்குமார் என்னை தாக்க முயற்சித்தார். சங்கீதா குற்றச்சாட்டு

நடிகர்சங்க தேர்தல் காலை முதல் அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தாலும் திடீரென சற்று முன்னர் இரு அணிகளுக்கும்...

நடிகர் சங்க தேர்தலில் திடீர் மோதல். விஷால் தாக்கப்பட்டதாக தகவல்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று காலை முதல் அமைதியாக நடந்து வந்த நிலையில், திடீரென சற்று...

முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று முன்னர் தனது வாக்கை பதிவு செய்தார்....

சீயான் விக்ரமின் 25 ஆண்டுகள். ஒரு சிறப்பு பார்வை

தமிழ்த்திரையுலகில் தான் நடிக்கும் ஒரு கேரக்டருக்காக தன்னையும் தனது உடலையும் வருத்தி, அந்த கேரக்டராக மாறும் ஒரே நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை...

'சிவப்பு' திரை விமர்சனம்: இலங்கை தமிழ் அகதிகள் குறித்த நேர்மையான பதிவு

தமிழ் சினிமாவில் அண்மைய ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை விவரிக்கும் படங்கள் ஓரளவு கணிசமாக வந்துள்ளன. அந்த வரிசையில் சத்ய சிவா எழுதி இயக்கியிருக்கும் ’சிவப்பு’....