தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் எழுதிய கடிதம்
- IndiaGlitz, [Saturday,July 08 2017]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
100 ஆண்டுகள் கடந்து பயணிக்கும் தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, இணையதளம், திருட்டு விசிடி போன்றவற்றை கடுமையாக சந்தித்து போராடி கொண்டிருக்கிற இந்த நிலையில் மத்திய அரசின் GST, மாநில அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரிவிதிப்பு போன்றவற்றினால் 60 விழுக்காடு வரி சுமையை ஏற்பட்டிருப்பதை அறிந்து ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.
இனி திரைத்தொழிலையே செய்ய முடியாது என்ற சூழ்நிலையிலேயே திரையரங்குகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கோரிக்கையாக தமிழக முதல்வர் அவர்களிடம் வைக்கப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் இரண்டு நாட்களாக விவாதித்து ஒரு குழுவும் அமைத்து இதனுடைய சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து அதன்பின் இந்த வரிவிதிப்பு என்பதை முடிவு செய்யலாம் என்று தீர்மானித்திருப்பது எங்களுக்கு எல்லாம் பெருமகிழ்வை தருகிறது
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவும், தமிழ் திரையுலகத்தின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்படுகின்ற இந்த நேரத்தில் தமிழ் திரையுலகம் காப்பாற்றப்படும் என்கின்ற உத்தரவாதத்தை தமிழக அரசு தந்திருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். இதற்காக தொடந்து உழைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர்கள் திரு.டி.ஜெயக்குமார், திரு எஸ்.பி வேலுமணி, திரு கே.சி வீரமணி, திரு கடம்பூர் ராஜூ மற்றும் தலைமைச்செயலாளர், இதுசம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் ஆகியோர்களுக்கும் ஒட்டுமொத்த திரையுலகத்தின் சார்பில் எங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் தனது மகிழ்வையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.