சென்னையில் ஊரடங்கு: தென்னிந்திய நடிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகம் என்பதால் இந்த நான்கு மாவட்டங்களிலும் நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து ஒரு சில நிபந்தனைகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க நடவடிக்கைகளையும் சற்று முன் தமிழக அரசு வெளியிட்டது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் சென்னையில் முழு ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த முழு ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டியது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதனடிப்படையில் ஜூன் 19 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை சங்க அலுவலகம் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்