சூர்யா குறித்த விமர்சனம்: சன் டிவிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவிக்கும் நடிகர் சங்கத்திற்கும் நீண்டகாலமாக நல்ல உறவு உள்ளது. சமீபத்தில் நடந்த நட்சத்திர விழாவில் சன் டிவி ஒரு பெரிய தொகையை நடிகர் சங்க கட்டிட நிதியாக வழங்கியது. இந்த நிலையில் சன் டிவி குழுமத்தில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் சூர்யா குறித்து தரம் தாழ்ந்த விமர்சனம் வெளிவந்தது நடிகர் சங்கத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோலிவுட் திரையுலகினர் ஏற்கனவே தனித்தனியாக இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் சங்கம் சார்பில் சன் டிவிக்கு நோடீஸ் அனுப்பபட்டுள்ளது. சன் டிவி ஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்றாலும் ஒரு மூத்த உறுப்பினரை அவமரியாதை செய்வதை பொறுத்து கொள்ள முடியாது என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
சமீபத்தில் உங்களது சேனலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர் திரு.சூர்யாவின் உருவ அமைப்பைப் பற்றி கேலி செய்யும் விதமாக இரு இளம் பெண்கள் பேசிய தொகுப்பு வெளியானது. தனிப்பட்ட ஒருவரை பற்றி இதைப் போன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்கு பொருத்தமானது அல்ல.
சட்டத்தின்படி, இதுர சராசரி குடிமக்களை போல் ஒரு நடிகருக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நாகரிகம், அடிப்படை மரியாதையுடன் கூடிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே மேற்கண்ட காட்சியை வெளியிட தங்களது நிறுவனம் அனுமதித்திருக்க கூடாது என கருதுகிறோம்.
ஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்னும் வகையில் உங்களது சன் குழும நிகழ்ச்சிகளில் எங்களது பணிகளைப் பற்றிய ஆக்கப்பூர்வமான - அநாகரிகமான எவ்வித விமர்சனங்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது மூத்த உறுப்பினரும், மரியாதைக்குரிய நடிகருமான ஒருவரை காயப்படுத்தும் வகையில், அர்த்தமில்லாத இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற கசப்பான காட்சிகள் உங்களது குழுமத்திற்கு சொந்தமான சேனல்களில் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அளிப்பீர்கள் என வலியுறுத்துகிறோம்.
நமக்கிடையேயான உறவில் கறைபடியாத வகையில் உடனடியாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments