காவிரிக்காக நடிகர் சங்கம் உண்ணாவிரதம்: நாசர், பொன்வண்ணன் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும், போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் சங்கமும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் தேதி அறிவிக்கப்படும் என்றும் நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து , நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:
திரைத்துறை ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பம் போல ஒற்றுமையாக இருந்தது. அது டிஜிட்டலாக மாறிய பிறகு, பல பிரச்சினைகள் வந்துவிட்டன. திரையுலகினர், திரையரங்கு உரிமையாளர்கள், கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் ஆகிய 3 தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசினால் மட்டுமே இப்பிரச்சினை தீரும்.
திரைத்துறை நன்மை கருதி, தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. இப்பிரச்சினையில் நடிகர் சங்கத்திடமும் தயாரிப்பாளர்கள் சங்கம் சில கோரிக்கைகளை வைத்துள்ளது. அதுகுறித்து சங்க நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது பெரிய அளவில் 2 போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் ஒன்று, ஸ்டெர்லைட் பிரச்சினை. இதை தூத்துக்குடிக்கான பிரச்சினையாக பார்க்காமல் தமிழகத்துக்கான பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.
அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் நடத்தும் போராட்டத்துக்கும் நடிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. இந்த 2 பிரச்சினைகளையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களோடு திரையுலகமும் இணைந்து போராட திட்டமிட்டுள்ளது.
விரைவில் அரசிடம் அனுமதி பெற்று சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அது ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டமாக இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments