நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள்
- IndiaGlitz, [Saturday,November 26 2016]
நடிகர் சங்க 63வது பொதுக்குழு நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் திட்டமிட்டபடி இந்த பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோளை அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு வருகிற நவம்பர் 27ஆம் தேதி ஞாயிறு அன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி' வளாகத்தில் அமைந்துள்ள பெட்ராம் ஹாலில் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழாவும், மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவும், பொதுக்குழு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூத்த கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட உள்ளார்கள். நூறு ஆண்டுகள் கடந்த மூத்த கலைஞர்களின் நினைவாக பல விருதுகளும் அளிக்கப்பட உள்ளது.
அன்றைய தினம் தனிப்பட்ட முறையில் சுவரொட்டிகளோ, விளம்பர போர்டுகளோ வைக்க காவல்துறை மற்றும் லயோலா கல்லூரி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதால், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் தனிப்பட்ட விளம்பரங்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உறுப்பினர் அடையாள அட்டையுடன் வரும் உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழு அரங்கத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே, உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் வருமாறும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.