சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம். நடிகர் சங்க பொதுக்குழுவில் நடந்த சில துளிகள்
- IndiaGlitz, [Sunday,November 27 2016]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் லயோலா கல்லூரியில் நடப்பதாக இருந்து அதன் பின்னர் மிரட்டல் காரணமாக தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்திலேயே நடந்தது. இந்த பொதுக்குழுவில் திரைப்பட நடிகர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதால் ஒருசில சிறு அசம்பாவிதங்கள் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது.
இந்த பொதுக்குழுவின் ஹைலைட் முன்னாள் நடிகர் சங்க தலைவர் மற்றும் பொதுசெயலாளர் ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டதுதான். ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இருவரும் இன்று நிரந்தரமாக நீக்கப்படுவதாக விஷால் அறிவிக்க, அதை ஆமோதிக்கும் வகையில் பொதுக்குழுவினர் பெருத்த கரகோஷத்தை எழுப்பினர்.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய சீனியர் நடிகர்களும், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் கமல்ஹாசன் ஸ்கைப் மூலம் பொதுக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கைப் மூலம் கமல்ஹாசன் பேசியபோது, "“ நடிகர் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளும் நமது இடத்தில் நடைபெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அது நிறைவேறிவிட்டது. என்னைவிட வயதில் இளையவர்கள் மத்தியில் மிகுந்த நட்பும், பொறுப்பு உணர்வும் இருப்பதை உணர்கிறேன். இதில் மறைந்த கலைஞர்களின் பங்களிப்பும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் உள்ளது. பேசவாய்ப்பளித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்' என்று கூறினார்.
பொதுக்குழு கூட்டம் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டதும் அங்குள்ள கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. ஒருசிலர் தாமதமாக வந்தவர்கள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதி கேட்டதாகவும், அவர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த பொதுக்குழு நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கினார். நடிகர்களுக்குள் பல்வேறு பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் எப்போதும் ஒற்றுமையானவர்கள் என்று சுஹாசினி கூறியபோது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது
மறைந்த ஜேப்பியார், முன்னாள் திரைக் கலைஞர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பொதுக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின
பழம்பெரும் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்களை கெளரவிக்கும் வகையில் இவரைப் பற்றிய புத்தகதம் ஒன்ரை பழம்பெரும் நடிகர் சிவக்குமார் வெளியிட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பெற்று கொண்டார்.
பொதுச்செயலாளர் விஷால் பேசியபோது, "சங்க உறுப்பினர்களின் நலன்களுக்காகவே, நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இதற்கு எத்தகைய தடைகளை நீங்கள் போட்டாலும், அத்தனையும் உடைத்து சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்தே தீர்வோம். இந்த இடத்தில் கட்டிடம் கட்டாமல் நாங்கள் ஓயமாட்டோம். இன்று பொதுகுழுவிற்கு வந்து சண்டையிடும் சிலர் என்னைப் பார்த்து “ஆம்பள”யா என்று கேட்கிறார்கள். நான் ஆம்பள' தான் என்பதை தற்பொழுது நிரூபித்துள்ளேன். எத்தகைய மிரட்டலுக்கும் பயப்படபோவதில்லை.
பொருளாளர் கார்த்தி சங்க கணக்கு வழக்குகள் பற்றிய விபரங்களை தெரிவித்தார். பின்னர் அவர் பேசியபோது, "நடிகர் சங்க அறக்கட்டளையில் சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் தாங்களே நிரந்தர அறங்காவலர்கள் என நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு யாருடைய ஒப்புதலையும் பெறவில்லை. இதனை மாற்றி எழுத ஒப்புதலைக் கோருகிறேன்" என்ற போது யாருமே எதிர்ப்பு தெரிவிக்காததால் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த கூட்டத்தில் பேசிய வைகைப்புயல் வடிவேலு, "காணாமல் போன நடிகர் சங்கத்தை கண்டு பிடித்தது மட்டுமில்லாமல், இந்தக்கூட்டமும் பல எதிர்ப்புகளைத் தாண்டி நடந்ததே மிகப்பெரிய வெற்றி. இருப்பினும் நல்லது செய்வதை கெடுப்பதற்காக எப்போதுமே சிலர் இருப்பது வேதனையளிக்கிறது' என்று கூறினார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகைகள் யாரும் இபந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. எனினும் பழம்பெரும் நடிகைகள் எம்.என்.ராஜம், சரோஜா தேவி, சாரதா, சச்சு, ரேகா, அம்பிகா, சுஹாசினி, ரேவதி, மோனிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைத்து நடிகர்களுக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அதற்கான முழுச்செலவையும் நடிகர் அரவிந்த் சாமி ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் நடிகர் விஷால் அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் விஷாலின் உதவியாளர்கள் காயம் அடைந்தனர். அதுமட்டுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. இத்தாக்குதல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் விஷால் தெரிவித்தார். அதேபோல் பொதுக்குழு நடந்த இடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கருணாஸின் காரையும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை கருணாஸின் ஆதரவாளர்கள் தாக்கியதாகவும், போலீஸார் தலையிட்டு இந்த பிரச்சனையை முடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஒருசில அசம்பாவித சம்பவங்கள் தவிர மொத்தத்தில் இந்த பொதுக்குழு அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது.