நடிகர் சங்கத்தின் அதிரடி முயற்சியால் திருட்டு டிவிடி கும்பல் தலைவன் கைது
- IndiaGlitz, [Wednesday,May 25 2016]
தமிழ்த் திரையுலகை தற்போது ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் ஒரே பிரச்சனை திருட்டுடிவிடி பிரச்சனைதான். புதிய படம் ஒன்று வெளியான நாளே திருட்டுடிவிடியும் வெளியாவதால் படம் நல்ல ரிசல்ட்டை பெற்றாலும் சரியான அளவில் வசூல் ஆகாமல் தயாரிப்பாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு திரையுலகினர் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தபோதிலும் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றவுடன் திருட்டு டிவிடிக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்தது. சமீபத்தில் இந்த விஷயத்தில் நடிகர் சங்க செயலாளர் விஷால் தலைமையிலான குழு மிகவும் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் திருட்டு டிவிடியை ஒழிக்க நடிகர் சங்கமே களத்தில் இறங்கியது. நடிகர்கள் நந்தா, ரமணா ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு கடையிலும், எருமாபாளையத்தில் உள்ள ஒரு கடையிலும் திருட்டு டிவிடி தயாரிக்கப்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் இதுகுறித்து திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு டிஎஸ்பி நீதிராஜ், சேலம் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் மற்றும் போலீசார் நந்தா, ரமணா சுட்டிக்காட்டிய 2 இடத்திலும் சோதனை நடத்தி அங்கு பதிவாகிக்கொண்டிருந்த மருது உள்பட பல புதிய திரைப்படங்களின் திருட்டு டிவிடிக்களை கைப்பற்றினர். மேலும் இந்த குற்றத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான 65 வயது ராம்சந்த்லக்கி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய படங்களின் டிவிடிக்களை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்து ஆயிரக்கணக்கான பிரதிகள் போட்டு 8 மாவட்டங்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 7 டிவிடி ரைட்டர், புதிய படங்களான மருது, பென்சில், மனிதன் உள்பட பல்வேறு படங்களின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவிடிக்களை பறிமுதல் செய்தனர்.