தமிழகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டது: நடிகர் சங்கம் இரங்கல் செய்தி
- IndiaGlitz, [Saturday,September 02 2017]
நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பை இழந்த அரியலூர் அனிதா, மனவேதனை காரணமாக உயிரையும் இழந்தார். அவருடைய கனவுகள் கலைந்தது. 1176 மதிப்பெண்கள் மண்ணோடு புதைந்துவிட்டது. இந்த துயரத்தில் இருந்து அவருடைய குடும்பமும், உறவினர்களும் ஏன் தமிழக மக்களுமே விடுபட வெகுநாட்கள் ஆகும். ஆறுதலால் அடங்கி போக முடியாத இந்த துயர சம்பவத்திற்கு கோலிவுட் திரையுலகினர் உள்பட பல்வேறு துறையினர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது நினைத்து மிகவும் மனவேதனை அடைகிறோம். தமிழகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்து வாடுகிறது. சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்றால் உடனடியாக அதனை செயல்படுத்துவது அனைவரையும் பாதிக்கும். அதற்கான உதாரணம் தான் அனிதாவின் மரணம். இனி வரும் காலங்களில் சமூகத்தில் எந்தவொரு முக்கியமான மாற்றம் என்றாலும், மாற்றம் சார்ந்த அனைவரது நலன்களையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்கொலை மட்டுமே ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக இருக்காது. இதனை அனைவரும் உணர வேண்டும். இந்த சமூகத்தில் அனைத்து வலிகளையும் கடந்தால் மட்டுமே வெற்றியை நிலைநாட்ட முடியும். வெற்றி என்ற மூன்று எழுத்தை சாதாரணமாக அடைந்துவிட இயலாது. ஆகவே, இனி வரும் காலங்களில் தற்கொலை என்ற சோக முடிவுக்கு யாரும் வர வேண்டாம் என்றும் வேண்டுகிறோம்.
அனிதாவின் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சண்முகம் கூலித் தொழிலாளி. பிளஸ் 2 தேர்வில் இவர் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்தார்.
இனிமேல் அனிதா போன்றதொரு தற்கொலை மரணம் நிகழாமல் தடுக்க வேண்டும். அனிதாவை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.