'96' பட நிறுவனத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்
- IndiaGlitz, [Saturday,November 10 2018]
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் '96'. இந்த படத்தின் ரிலீசின்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக விஜய்சேதுபதி தனது சம்பளத்தை விட்டு கொடுக்கவும், படம் சம்பந்தப்பட்ட கடன்களை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகர், நடிகைகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 'துப்பறிவாளன்' படத்துக்காக விஷாலுக்கும், 'வீரசிவாஜி' படத்துக்காக விக்ரம்பிரபுவுக்கும் '96' 'படத்துக்காக விஜய்சேதுபதிக்கு ஊதிய பாக்கி வழங்காமல் உள்ளது.
திரைப்படங்களை திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஊதியம் வழங்காமல் படங்களை திரையிடுகிறது.
பட வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில் நடிகர்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஆனால் இதனை பலவீனமாக கருதி ஒப்புக்கொண்ட சம்பளத்தை தரமறுப்பதும் வழக்கமாகியுள்ளது. இதுபோன்று செயல்படும் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளர்களுக்கு நடிகர், நடிகையர் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அநத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.