காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,April 03 2018]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் கொந்தளித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் திரையுலகினர்களும் தற்போது போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் சங்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி அறவழியில் கண்டன போராட்டத்தை வரும் 8ஆம் தேதி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம்’ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.