தென்னிந்திய நடிகர் சங்கம் குறித்து 'அம்மா' எடுத்த முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Saturday,July 02 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நலிந்த கலைஞர்களுக்கு உதவுவது, நட்சத்திர கிரிக்கெட் மூலம் கிடைத்த பணத்தின் மூலம் நடிகர் சங்க கடனை அடைத்தது, நடிகர் சங்கத்திற்கு என தனி கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் இவற்றில் முக்கியமானது.
இந்நிலையில் அம்மா (Association of Malayalam Movie Artists) என்று கூறப்படும் மலையாள திரைப்பட சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அந்த கடிதத்தில் நடிகர் சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் வெற்றி பெற ஒத்துழைத்த”அம்மா”அமைப்புக்கு நன்றி தெரிவிப்பதோடு எதிர் காலத்தில் இரு நடிகர் சங்கமும் தோளோடு தோள் சேர்ந்து சினிமா தொழிலின் வளர்ச்சிக்காகவும் நடிகர் நடிகைகளின் நலனுக்காகவும் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை” அம்மா”அமைப்பின் பொதுகுழுவில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வாசிக்க, அனைத்து அங்கத்தினரின் ஒப்புதலும் பெறபெற்றது. மேலும்”அம்மா”அமைப்புயின் ஆதரவும், நடிகர் சங்க நல் உறவு வலுவடையவும் சகலவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அதன் செயலாளர் நடிகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.