ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு
- IndiaGlitz, [Wednesday,January 18 2017]
ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று தமிழகம் முழுக்க எழுச்சி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திரையுலகினர்களும் இந்த போராட்டத்தில் தமிழன் என்ற உணர்வுடன் பரிபூரண ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும் திரையுலகினர் தங்களை முன்னிறுத்தாமல் இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும் என்று உணர்வுடன் ஆதரவு கொடுத்து வருவது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். வரும் 20ஆம் தேதி அதாவது வரும் வெள்ளியன்று சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகவும், அன்றைய தினம் கோலிவுட் திரையுலகினர் அனைவரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், ஸ்டன்ட் இயக்குனர்கள் சங்கம், என அனைத்து திரைத்துறைகளை சார்ந்த சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.