நடிகையர் திலகம்: சாவித்திரிக்கு உயிர் கொடுத்த கீர்த்திசுரேஷ்
நடிகர்களுக்கு திலகம் சிவாஜி கணேசன் என்றால், நடிகைகளுக்கு திலகமாக இருந்தவர் சாவித்திரி. தமிழ், தெலுங்கு உள்பட சுமார் 300 படங்களுக்கும் மேல் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்த படம் ஒரு திரைப்படம் அல்ல, காவியம் என்றே கூறலாம்
பத்திரிகையில் பணியாற்றும் சமந்தா, சாவித்திரி குறித்த கட்டுரை ஒன்றை எழுதும் பொறுப்பை பெறுகிறார். இதனையடுத்து சக பத்திரிகையாளர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சாவித்திரி குறித்து அவர் திரட்டும் தகவல்களே இந்த படம். அப்பா இல்லாமல் அம்மா மற்றும் பெரியம்மா குடும்பத்துடன் வளரும் சாவித்திரி, நாடக நடிகையாகி, பின்னர் சினிமா நடிகையாகிறார். இந்த சமயத்தில் பல படங்களில் உடன் நடிக்கும் ஜெமினி கணேசனுடன் காதல் ஏற்படுகிறது. ஜெமினி கணேசன் திருமணம் ஆனவர் என்று தெரிந்ததும் அவரிடம் இருந்து விலக முயற்சிக்கின்றார். ஆனால் இருவரிடத்திலும் உண்மையான காதல் இருந்ததால் அது திருமணத்தில் முடிகிறது. திருமணத்திற்கு பின்னர் ஜெமினியை விட சாவித்திரிக்கு புகழ் அதிகரிக்க அதனால் ஏற்படும் ஈகோ இருவரின் பிரிவுக்கு காரணமாகின்றது. அதன் பின்னர் சாவித்திரியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், சோகங்கள் மற்றும் இறுதியில் ஏற்படும் பரிதாபமான முடிவு ஆகியவைதான் இந்த படத்தின் மீதிக்கதை
சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்று கூறுவதை விட சாவித்திரியாகவே வாழ்ந்துள்ளார் என்றுதான் கூறலாம். சாவித்திரி உயிருடன் இருக்கும்போதே அவரை பற்றிய வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு படம் எடுத்தால் இந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். அச்சு அசலாக சாவித்திரியாகவே மாறிய கீர்த்தி சுரேஷூக்கும், மாற்றிய இயக்குனர் நாக் அஸ்வின் அவர்களுக்கும் பாராட்டுக்கள். 14 வயதில் சினிமாவில் நடிக்க பட்டணத்திற்கு வரும்போது வெளிப்படும் அப்பாவி முகம், கிளிசரின் இல்லாமல் ஒரே ஒரு கண்ணில் மட்டும் தன்னால் கண்ணீர் வரவழைக்க முடியும் என்று இயக்குனருடன் நம்பிக்கையுடன் தெரிவிக்கும் காட்சி, ஜெமினி கணேசனுடன் காதல், பின்னர் மோதல், தனக்கு துரோகம் செய்பவர்களையும் வாழ்த்தும் பரந்த எண்ணம், தனக்கு துரோகம் செய்து இன்னொரு பெண்ணுடன் ஜெமினியை பார்க்கும்போது எழும் கோபம், இறுதியில் அனைவரும் கைவிட்ட நிலையில் மகனின் பாசத்துக்காக ஏங்கும் தாய், என கீர்த்திசுரேஷ் அப்படியே சாவித்திரியை திரையில் கொண்டு வந்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தன்னுடைய வாழ்நாளின் எந்த கட்டத்திலும் நினைத்து பார்க்கும் வகையான ஒரு காலத்தால் அழியாத காவியமாக இந்த படம் அவருக்கு இருக்கும்
துல்கர் சல்மானால் அப்படியே ஜெமினி கணேசனை கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகையாளர் மதுரவாணியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு ஓகே என்றாலும் இந்த படத்தின் மெயின் கதைக்கு இவரது கேரக்டர் சம்பந்தமில்லாமல் இருப்பதால் அவரது நடிப்பு மனதில் ஒட்டவில்லை. சமந்தா-விஜய்தேவரகொண்டாவின் காதல் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கின்றது. விஜய் தேவரகொண்டா , பிரகாஷ்ராஜ், பானுப்ரியா, ஷாலினி பாண்டே, ஆகியோர்களும் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர்.
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை கச்சிதமாக கொடுத்து, அவரை மீண்டும் உயிர்த்தெழ செய்துள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின். கீர்த்தி சுரேஷிடம் அவர் வாங்கியுள்ள வேலை உண்மையில் அபாரமானது. சாவித்திரியின் சினிமா வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளார். இருப்பினும் சாவித்திரிக்கு உச்சகட்ட புகழ் கிடைக்க காரணம் அவர் நடித்து வெற்றி பெற்ற பல தமிழ்ப்படங்கள்தான். ஆனால் சாவித்திரியை ஒரு தெலுங்கு நடிகையாக மட்டுமே பெரும்பாலும் காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின். நாகேஸ்வரராவ், ரெங்காராவ், என்.டி.ராமராவ் கேரக்டர்களை படத்தில் இணைத்த இயக்குனர், சிவாஜிகணேசன் கேரக்டரையும் படத்தில் இணைத்திருந்தால் இந்த படம் ஒரு முழுமை பெற்றிருக்கும். மேலும் இந்த படத்தில் சமந்தா கேரக்டருக்கு அதிக காட்சிகள் வைத்து படத்தின் வேகத்தையும் இயக்குனர் குறைத்துள்ளார். சாவித்திரி போன்ற ஒரு மாமேதையின் வாழ்க்கை வரலாற்று கதையில் அவரை பற்றி கதையெழுதும் ஒரு பத்திரிகையாளர் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது படத்தின் வேகத்தை குறைத்துள்ளது.
கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் வசனங்கள் படத்திற்கு முதுகெலும்பு என்று கூறினால் அது மிகையாகாது. மிக்கி மி மேயரின் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. பாடல்களை படமாக்கிய விதமும் சூப்பர். பின்னணி இசையிலும் அசத்தியுள்ளார் இசையமைப்பாளர்.
ஒரு வரலாற்று படத்திற்கு கலை இயக்கமும் ஒளிப்பதிவும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து தோட்டாதரணியும், டானி சா லோ அவர்களும் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக அந்த காலத்து சென்னை , ஐதராபாத், வாஹினி ஸ்டுடியோ ஆகிய காட்சிகளில் இருவரின் உழைப்பு தெரிகிறது. எடிட்டர் வெங்கடேஸ்வரராவ், சமந்தா-விஜய்தேவரகொண்டா காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் கத்தரி வைத்திருக்க வேண்டும்.
மொத்தத்தில் நடிகையர் திலகம்' காலத்தால் அழியாத காவிய படங்களின் பட்டியலில் இணைக்க ஒரு பொருத்தமான படம். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ளவும் கீர்த்திசுரேஷின் அருமையான நடிப்பை பார்க்கவும் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய ஒரு படம் தான் 'நடிகையர் திலகம்
Comments