நயன்தாராவின் அர்ப்பணிப்பு குறித்து ஆச்சரியப்படும் படக்குழுவினர்
- IndiaGlitz, [Friday,October 23 2015]
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி பெருவாரியான ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றி நடைபோடுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை அதிக அக்கறையுடன் சிறப்பாக நடித்த நயன்தாராவுக்கே இந்த வெற்றியின் பெரும்பங்கு உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த படத்தில் நயன்தாரா முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளதாகவும், அதிலும் ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஈடுபாட்டுடன் அவர் டப்பிங் பேசியுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். சாதாரண டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மாதிரி டப்பிங் பேச முடியாது என்றும், இந்த படத்தில் நடிக்கும்போது தனக்கு எந்தவிதமான உணர்வு இருந்ததோ அதே போன்ற உணர்வை வரவழைத்து டப்பிங் செய்ய வேண்டும் என்ற நயன்தாரா கூறியதாகவும், இதற்காக அழுகிற காட்சிகள் வரும்போது கிளிசரின் வாங்கி அழுதபடியே டப்பிங் செய்ததாகவும் கூறியுள்ளார்
நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வே படம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நடிகை பத்து வருடங்களுக்கும் மேல் ஃபீல்டில் இருப்பது எதனால் என்பது இப்போது அனைவருக்கும் புரிகிறது அல்லவா?