Download App

Naan Sirithal Review

நான் சிரித்தால் - திரையில் மட்டும்

கணிசமான இளைஞர் பட்டாள ரசிகர்களை கொண்ட ஹிப் ஹாப் ஆதி காமடி கிங் சுந்தர் சி தயாரிப்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற காமடி குறும்படத்தை நான் சிரித்தாள் என்ற பெயரில் பெரிய திரையில் கொண்டு வந்திருக்கிறார். ஹீரோவுக்கு சிரிக்கும் வியாதி என்ற புது கதை கருவுடன் வந்திருக்கும் படம் பார்வையாளர்களையும் சிரிக்க வைத்ததா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

ஹிப் ஹாப் ஆதி ஒரு ஐ டி கம்பெனியில் பணிபுரியும் நடுத்தர வர்க்கத்து இளைஞர்.  பல தோல்விகளை கண்ட அவருக்கு சோகம் வரும்போது தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சப்தம் போட்டு சிரிக்கும் வியாதி தொற்றி கொள்கிறது. அந்த வியாதியால் தன் வேலை,  காதல் ஆகியவையை இழந்து விடுகிறார். டில்லி பாபு என்கிற தன் நண்பன் காதல் தோல்வியால் காணாமல் போக அவனை தேடி செல்லும்போது ஒரு தவறான புரிதலால் பயங்கர கூலிப்படை தலைவன் கே எஸ் ரவிக்குமாரிடம் மாட்டிக்கொள்கிறார். டில்லி பாபு என்கிற பெயரை கொண்ட கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய எதிரி ரவி மரியா அனுப்பிய ஆள் என்று எண்ணி ஆதியை தாக்க வலி தாங்காமல் கத்தி கத்தி சிரிக்கிறார் ஆதி இதில் அவமானம் அடையும் ரவிக்குமார் அவரை கொல்ல முற்படும்போது போலீசில் சிக்குகிறார். ஜெயிலிலிருந்து ஆதியை கொல்ல நினைக்கிறார். தன் வியாதியிலிருந்து ஆதி மீண்டாரா மற்றும் ரவிகுமாரிடம் இருந்து தப்பித்தாரா என்பதே மீதி கதை. 

ஹிப் ஹாப் ஆதியிடம் வசன உச்சரிப்பிலும் நடனத்திலும் பெரிய முன்னேற்றம் தெரிகிறது. அவர் அப்பா படவா கோபியுடன் பாசமான காட்சிகளில் சிறந்த நடிப்பையும் தருகிறார். ஆனாலும் அந்த சிரிப்பு வியாதியின் வலியை பாரவையாளர்களிடம் கடத்த தவறி விடுவதால் அவர் மீது எந்த ஈர்ப்பும் வராமல் போய் விடுகிறது.  ஐஸ்வர்யா மேனனுக்கு அதிக வாய்ப்பில்லை ஒரே ஒரு குத்துப்பாட்டில் மட்டும் உற்சாக நடனம் ஆடியிருக்கிறார்.  படத்தில் அதிகம் ஸ்கோர் செய்திருப்பவர் ஆதியின் அப்பாவாக வரும் படவா கோபித்தான். மகனை நண்பனாக பார்பதாகட்டும், அவனை சிறு பிள்ளை போல் உபசரிப்பதிலாகட்டும், காதலுக்கு உதவுவதாகட்டும், கடைசியில் லோக்கலாக இறங்கி சம்பந்தியிடம் ரவுசு காட்டுவதாகட்டும் மனிதர் சும்மா கிழி கிழி.  கே எஸ் ரவிக்குமாருக்கும் ரவி மரியாவுக்கு தங்கள் பாத்திரத்தை டெரராக கையாள்வதா அல்லது காமெடியாக கடந்து செல்வதா என்ற குழப்பம் படம் முழுக்க தெரிகிறது அது அவர்கள் பிழை அல்ல பாத்திர படைப்பின் பிழையே. முனீஸ்காந்த் மற்றும் ஷா ரா வின் கடியை விட ஓரிரு காட்சிகளில் வரும் பிக் பாஸ் ஜூலியே மேல். காதல் தோல்வியில் கலங்கி உருகி தற்கொலைக்கு முயலும் டில்லி பாபுவாய் யோகி பாபு கடைசி ஓரிரு காட்சியில் மட்டும் வந்தாலும் ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக சிரிக்க வைக்கிறார். 

படவா கோபி ஆதி சேர்ந்து வரும் காட்சிகள் எதார்த்தமாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. ஆரம்பத்தில் விஜய் மற்றும் அஜீத்தின் அழுகை காட்சிகளை திரையரங்கில் பார்த்து ஆதி வாய் விட்டு சிரிக்க அவர்களது ரசிகர்கள் பொங்கி எழுந்து அவரை அடித்து நொறுக்கும் இடம் கலகலப்பாக இருக்கிறது. படம் கிளைமாக்ஸை நெருங்கும் போதுதான் சூடு பிடிக்கிறது கொஞ்சம் சிரிக்கவும் முடிகிறது அதே பாணியை படம் முழுக்க பின்பற்றியிருந்தால் கூட ஓரளவுக்கு தப்பித்திருக்கலாம். கடைசியில் ஆதி சொல்லும் மெசேஜ் துருத்தி நின்றாலும் சிந்திக்க வைக்கிறது. 

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை சில இடங்களில் உற்சாகமாகவும் பல இடங்களில் இரைச்சலாகவும் ஒலிக்கிறது. பாடல்கள் தாளம் போடா வைத்தாலும் எல்லாமே ஒரே மாதிரியாக இருப்பது மைனஸ். படத்தில் ஒளிப்பதிவு மந்தமாக இருக்கிறது எடிட்டிங்கும் படத்தை சுவாரசிய படுத்தவில்லை. இயக்குனர் ராணா ஒரு நல்ல கதை கருவை வைத்து அதில் காமெடியில் புகுந்து விளையாட இடமிருந்தும் ஆழமில்லாத பாத்திர படைப்புகளாலும் தொய்வான திரைக்கதையாலும் தன்னுடைய குறும்படத்த்தில் இருந்த சுவாரசியத்தை இதில் கொண்டு வர தவறியிருக்கிறார். பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம். 

Rating : 2.3 / 5.0