நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் - திரை விமர்சனம்
- IndiaGlitz, [Friday,July 24 2015]
டிமாண்ட்டி காலனி என்ற சீரியஸான பேய்க்கதையை தேர்வு செய்த அருள்நிதி அடுத்த படத்தை ஒரு முழுநீள நகைச்சுவை படமாக தேர்வு செய்து நடித்துள்ளார். சீரியஸ் படத்தில் பட்டையை கிளப்பிய அருள்நிதி, சிரிப்பு படத்தில் என்ன செய்தார் என்பதை தற்போது பார்ப்போம்.
ஐந்து முறை சிறந்த கிராமம் என ஜனாதிபதி விருது வாங்கிய கிராமம், தெருவில் தங்கச்சங்கிலி இருந்தால் கூட யாரும் அதை சொந்தம் கொண்டாட மாட்டார்கள், போலீஸ் ஸ்டேஷன் என்பது பெயரளவிற்கு மட்டுமே, ஆபீஸ் மாதிரி 9 மணியில் இருந்து 5மணி வரை மட்டுமே செயல்படும். அதிலும் ஞாயிறு விடுமுறை. போலீஸ்காரர்களுக்கு சுத்தமாக வேலையே இருக்காது. போலீஸ் ஸ்டேஷனில் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டு கிரிக்கெட் பார்ப்பார்கள். ஊரில் உள்ள வீடுகள் எதற்குமே பூட்டு கிடையாது. ஏனென்றால் அங்கு யாரும் திருட மாட்டார்கள். ஊருக்குள் யாரும் மதுபானம் அருந்த மாட்டார்கள். பஞ்சாயத்து பிரசிடெண்ட்டிம் குறை சொன்னால் உடனே அவரே இறங்கி இந்த குறையை நிவர்த்தி செய்வார். இதுதான் அந்த கிராமம்.
இப்படிப்பட்ட கிராமத்தில் அருள்நிதி, சிங்கம்புலி, பகவதி பெருமாள் உள்பட நான்கு போலீஸ்காரர்கள். ஒரு கட்டத்தில் 25 வருடங்களாக புகார் வராத இந்த கிராமத்தின் போலீஸ் ஸ்டேசனை மூடிவிட காவல்துறை அலுவலகம் முடிவு செய்து இவர்கள் நான்கு பேர்களையும் இராமநாதபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்கிறது. வேலையே இல்லாமல் சொகுசாக வாழ்ந்த இந்த கிராமத்தை விட்டு எப்படி செல்வது என்று முடிவு செய்யும் நான்கு போலீஸ்காரர்களும் எப்படியாவது இந்த கிராமத்தில் ஒரு குற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று விளையாட்டாக சில வேலைகளை செய்கின்றனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த விளையாட்டு வினையாகி பெரிய கலவரமே வெடித்து விடுகிறது. தாங்கள் எல்லோரும் மாற்றலாகி போனாலும் பரவாயில்லை. மீண்டும் கிராமத்தை ஒற்றுமையாக்க வேண்டும் என்று நால்வரும் முடிவு செய்கின்றனர். அவர்கள் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதுதான் கிளைமாக்ஸ்
அருள்நிதிக்கு இந்த படத்தில் நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் எதுவும் இல்லை. காமெடியும் அவருக்கு சரியாக வரவில்லை. சீரியஸ் காட்சிகளும் குறைவுதான். இருந்தாலும் ஓரளவுக்கு ஒப்பேற்றியிருக்கின்றார். ரம்யா நம்பீசனுடன் கனவுடன் மட்டும் காதல் செய்து, அந்த காதல் உண்மையில் நனவாகும்போது காட்டும் எக்ஸ்பிரஷன் மட்டும் ஓகே. ரம்யா நம்பீசன் வரும் காட்சிகள் குறைவு என்பதால் அவரது நடிப்பு குறித்து விமர்சனம் செய்ய தேவையில்லை.
உண்மையில் இந்த படத்தின் நாயகன் சிங்கம்புலிதான் என்று சொல்ல வேண்டும். காமெடியில் கலக்கியிருக்கின்றார். அவருக்கு சமமாக ஈடுகொடுத்திருக்கின்றார் பகவதிபெருமாள். ஊரில் உள்ள யாரையாவது குற்றம் செய்ய வைக்க இவர்கள் படும்பாடு செம கலகலப்பு. திருடனாக வருபவர் உள்பட படத்தில் நடித்துள்ள மற்ற கேரக்டர்கள் வெகு இயல்பாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஓகே ரகம். ரெஜினின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா, முதல் பாதியின் திரைக்கதையை கொஞ்சம் சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கலாம். ஒரு கிராமம் நல்ல கிராமம் என்பதை சொல்வதற்கு ஒருமணி நேரக் காட்சிகள் என்பது கொஞ்சம் ஓவர். முதல்பாதியின் நகைச்சுவை காட்சிகளும் சில இடங்களில் எடுபடவில்லை. சின்ன சின்ன நகைச்சுவை காட்சிகள் தவிரை முதல் பாதி கொஞ்சம் போர் அடிக்கின்றது. ஆனால் இரண்டாம் பாதியில் கிராமத்தில் உண்மையிலேயே கலவரம் வெடித்தவுடன் திரைக்கதையில் ஒரு பரபரப்பு தொற்றி கொள்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்றும், சிக்கலான முடிச்சை இயக்குனர் எப்படி அவிழ்ப்பார் என்று ஆடியன்ஸ் யோசித்து கொண்டிருக்கும்போதே திடீரென எதிர்பாராமல் படம் முடிந்துவிடுகிறது. இரண்டாம் பாதி படத்திற்காகவும், முடிவில் சொல்லும் மெசேஜ்ஜுக்காகவும் பார்க்கலாம்.
Read Naalu Policeum Nalla Irundha Oorum Review in English