நாச்சியார்: ஜோதிகாவின் மாறுபட்ட நடிப்பு
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கின்றார்கள் என்ற செய்தி வந்ததில் இருந்தே இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக டீசர் வெளியான பின்னர் அந்த ஒரே ஒரு வார்த்தை ஏற்படுத்திய பரபரப்பு அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கின்றது என்பதை அறிய அனைவரும் விரும்பியது உண்மைதான். இந்த எதிர்பார்ப்பை பாலாவும் ஜோதிகாவும் பூர்த்தி செய்தார்களா? என்பதை இப்போது பார்ப்போம்
வீட்டு வேலை செய்யும் மைனர் பெண் இவானாவை ஒரு சிறிய மோதலுக்கு பின் ஜி.வி.பிரகாஷ் காதலிக்கின்றார். ஒரு கட்டத்தில் மைனர் பெண் கர்ப்பிணியாகிவிட, அந்த கர்ப்பத்திற்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் என போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றனர். இந்த வழக்கை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியான ஜோதிகா, அந்த மைனர் பெண்ணை தன்னுடைய கஸ்டடியில் வைத்து காப்பாற்றுகிறார். ஆனால் அவருக்கு பிறந்த குழந்தைக்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் இல்லை என்பது டி.என்.ஏ மூலம் தெரியவருகிறது. அப்படியென்றால் அந்த கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்பதை ஜோதிகா கண்டுபிடித்து அவரை என்ன செய்கிறார்? என்பதுதான் மீதிக்கதை
வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டும் ஓடும் இந்த சிறிய கதைக்கு உயிர் கொடுத்தது ஜோதிகாதான். மிகச்சரியான தேர்வு. அதற்காக பாலாவை பாராட்டலாம். போலீசுக்கே உரிய கம்பீரம், உயரதிகாரியிடம் நக்கலாக பேசுவது, சக அதிகாரி ராக்லைன் வெங்கடேஷூடன் கருத்துமோதல், கிளைமாக்ஸில் குற்றவாளிக்கு கொடுக்கும் கொடூர தண்டனை என ஜோதிகா இதுவரை வெளிப்படுத்தாத வித்தியாசமான நடிப்பை அளித்துள்ளார்.
அதேபோல் அப்பாவி இளைஞர் கேரக்டருக்கு ஜி.வி.பிரகாஷ், மற்றும் இவானா தேர்வும் மிகப்பொருத்தம். முதல்முறையாக ஜிவி பிரகாஷை நடிக்க வைத்துள்ளார் பாலா. ஒரு நடிகர் பாலா படத்தில் நடித்துவிட்டால் அவருக்கு ஏறுமுகம் தான் என்பதை விக்ரம், சூர்யா முதல் பலரை பார்த்துள்ளோம். அந்த வரிசையில் இனி ஜிவி பிரகாஷூக்கு நல்ல எதிர்காலம் அமைய வாய்ப்புண்டு.
தன்னை கெடுத்தவன் யார் என்றே தெரியாமல் அப்பாவி பெண்ணாக இவானா சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் ஜிவி பிரகாஷூடன் மோதல், பின் ஏற்படும் காதல் ஆகியவற்றிலும் ஒரு புதுமுகம் போன்றே தெரியவில்லை. ராக்லைன் வெங்கடேஷ் உள்பட மற்ற கேரக்டர்களும் அவரவர் பங்கை சரியாக செய்துள்ளனர். ஜோதிகாவின் கணவராக நடித்தவர் மட்டும் அவருக்கு தம்பி போன்று உள்ளார்.
வழக்கமாக பாலா படத்தில் உள்ள நக்கலான சமுதாய அவல வசனங்கள் இதிலும் உண்டு. அல்லா, இயேசு, சாமி என ஒரு மதத்தையும் விட்டுவைக்கவில்லை. என் லவ்வர் தாங்க எனக்கு அம்மா, என்னை மாதிரி பசங்களுக்கு காதலி தாங்க அம்மா, பணங்கறது மீத்தேன் மாதிரி,அதல பாதாளம் வரை போய் நாசம் பண்ணீடும் போன்ற வசனங்கள் நச். ஆனால் திரைக்கதை ஆங்காங்கே தொடர்பு இல்லாமல் உள்ளது. பல காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளது ஒரு பெரிய மைனஸ். முதல் பாதியில் ஜிவி பிரகாஷ்-இவானா காதல் காட்சிகள் ரொம்ப சுமார் ரகம். ஜோதிகா தனது உயர் பெண் அதிகாரியை முறைப்பது, டிரைவரை வாடா போடா என்று பேசுவது, ஆகியவை சகிக்க முடியாத காட்சிகள். ஆனால் சிங்கம் படத்தில் சூர்யா பேசுவது போல் ஆக்ரோஷமாக வசனங்கள் பேசாமல் அமைதியாக அதே நேரத்தில் அழுத்தந்திருத்தமாக அவரை வசனம் பேச வைத்திருப்பது ஒரு ஆறுதல்.
இசைஞானிக்கும் பாலாவுக்கும் எப்பொதுமே கெமிஸ்ட்ரி சரியாக இருக்கும் என்பது இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரின் கேமிரா, சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் ஓகே ரகம்.
மொத்தத்தில் பாலாவின் வழக்கமான சைக்கோத்தனம் கலந்த குரூர காட்சிகள் இருந்தாலும், ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர்களின் மாறுபட்ட நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.
Comments