விஜய்யின் மாஸ் பாடலுக்கு காரணமான மிஷ்கின்
- IndiaGlitz, [Thursday,September 15 2016]
பிரபல இயக்குனர் வின்செண்ட் செல்வா இயக்கிய 'யூத்' உள்பட ஒருசில படங்களில் மிஷ்கின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அந்த வகையில் தற்போது வின்செண்ட் செல்வா இயக்கியுள்ள 'விருமான்டிக்கும் சிவனாண்டிக்கும்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார்.
இந்த விழாவில் அவர் பேசியபோது வின்செண்ட் செல்வா இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த 'யூத்' படத்தில் பணிபுரிந்தபோது நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்து கூறினார். இந்த படத்தில் மறைந்த கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த பாடலில் திருப்தி அடையாத மிஷ்கின் தனது நண்பர் கபிலன் எழுதிய ஒரு பாடலை 'வாலி' எழுதிய பாடலுக்கு பதிலாக மாற்றி வைத்துவிட்டார்.
இசையமைப்பாளர் மணிசர்மா, பாடகர் சங்கர் மகாதேவன் ஆகிய இருவருக்குமே தமிழ் தெரியாததால் இந்த தவறை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஒலிப்பதிவு செய்து முடித்ததும் தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மிஷ்கினை திட்ட, ஆனால் இயக்குனர் வின்செண்ட் மட்டும் மிஷ்கினை பாராட்டி இந்த பாடல் சூப்பராக இருக்கின்றது என்று கூறினாராம். அந்த பாடல்தான் 'யூத்' படத்தில் இடம்பெற்ற 'ஆல்தோட்ட பூபதி. இந்த பாடல் பல வருடங்களாக பிரபலமாக இருந்தது என்பதும் விஜய்யின் மாஸ் பாடல்களில் மிக முக்கியமானது என்பதும் அனைவரும் அறிந்ததே.