திரையரங்குக்குக் குழந்தைகளோடு வராதீர்கள். மிஷ்கின்
- IndiaGlitz, [Tuesday,September 15 2015]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பி.வாசு. இவருடைய மகன் சக்தி நடித்த தற்காப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: " 'தற்காப்பு' படத்துக்கு UA சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். UA மற்றும் A சான்றிதழ் பெற்ற படங்கள் 30% சதவீத வரி கட்டவேண்டியிருக்கிறது. திரைப்படத்துறை இன்று இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரியஅடி.
தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம். கெட்டவார்த்தைகள், வன்முறை இருந்தால் கூட அதற்கு A சான்றிதழ் என்று சொல்லிவிடுகிறார்கள். கெட்டவார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம் கொண்டு பேசும் போது 'போடா செல்லமே' என்றா திட்டமுடியும்?
இன்றைக்கு எல்லோரும் குழந்தைகளோடு படத்தைப் பார்க்கமுடியவில்லை என்று சொல்கிறார்கள். சினிமா மீடியம் என்பது குழந்தைகளுக்கானது அல்ல. எனவே திரையரங்குக்குக் குழந்தைகளோடு வராதீர்கள். இது வயதுவந்தவர்களுக்கான மீடியம். குழந்தைகளோடு கார்ட்டூன் படங்கள் பாருங்கள், அல்லது 'மைடியர் குட்டிச்சாத்தான்' மாதிரியான படங்களுக்குப் போங்கள். நான் அடுத்து திகில் கலந்த A படம்தான் எடுக்கப்போகிறேன், என் படத்துக்குப் பொம்ளைங்க தயவுசெய்து வரவேண்டாம்' என்று பேசியுள்ளார்.
இந்த விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, சமுத்திரக்கனி உள்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.