மைனா கணவரின் தற்கொலைக்கு யார் காரணம்? கடிதத்தில் பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் தெரியாமல் இருந்தது. ஆனால் சற்று முன்னர் தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில் அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதியுள்ளதாகவும் தெரிகிறது.
திருமணம் ஆகி ஒருவருடம் கூட நிறைவு பெறாத நிலையில் நந்தினிக்கும் அவர் கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளதாக தெரிகிறது. தனியாக இருந்த கார்த்திக் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் குளிர்பானத்துடன் விஷம் கலந்து குடித்துள்ளார். கார்த்திக்கை போலீஸார் கண்டுபிடித்தபோது அவர் இருந்த அறையில் கடிதம் ஒன்றையும் மீட்டனர். அந்த கடிதத்தின்படி அவரது தற்கொலைக்கு நந்தினியின் தந்தையும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, "கார்த்திக் அம்மா சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் நந்தினியை ஆசை, ஆசையாக கார்த்திக் காதலித்துள்ளார். ஆனால், திருமணம் முடிந்த தொடக்கத்திலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கார்த்திக்குக்கு ஏற்கெனவே வெண்ணிலா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அந்தப்பழக்கத்தை கார்த்திக், நந்தினியிடம் மறைத்துள்ளார். நந்தினி, கார்த்திக் திருமணம் நடந்த தகவலையறிந்த வெண்ணிலா, தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில் கார்த்திக் பெயரை குறிப்பிட்டதால் போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதனால் நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் மனவேதனை அடைந்தனர். இதுவே, நந்தினி, கார்த்திக் இடையே கருத்துவேறுபாட்டுக்கு முக்கியகாரணமாக இருந்தது.
இதைத்தவிர வேலைவாங்கி தருவதாகவும் கூறி கார்த்திக் சிலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால், நந்தினி, கார்த்திக்கைப் பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். தொடர்ந்து கார்த்திக்குக்கு சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய சாகச நிகழ்ச்சியில் கார்த்திக்கும், நந்தினியும் பங்கேற்றனர். அப்போது, கார்த்திக்குக்கு காலில் அடிப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்புகூட கார்த்திக் தன்னுடைய அம்மா சாந்தியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சைக்குப்பிறகு வீட்டுக்குத் திரும்பாமல் லாட்ஜுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்கு வராததால் சாந்தி, கார்த்திக்கின் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் பதிலளிக்காததால் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதன்பிறகே கார்த்திக் தற்கொலை செய்த விவரம் தெரியவந்தது. கார்த்திக் எழுதிய கடிதத்தில் நந்தினியின் தந்தை உள்பட இன்னும் சிலரது பெயர்களை சூசகமாகச் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக கார்த்திக் அம்மா புகார் கொடுத்தால் நந்தினி உள்பட அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.
ஆனால் இதுகுறித்து நந்தினி கூறியபோது, '"என்னுடைய கணவர் கார்த்திக் தற்கொலைக்கு நானும், என்னுடைய குடும்பத்தினரும் காரணமல்ல. கார்த்திக்குடன் பழகிய வெண்ணிலா ஏற்கெனவே அவரை மிரட்டியிருக்கிறார். கார்த்திக்கின் அனைத்து தகவல்களும் தெரிந்தபிறகு நானும், என்னுடைய குடும்பத்தினரும் அமைதியாகவே இருந்தோம். கார்த்திக், தன்னுடைய தற்கொலை கடிதத்தில் என்னுடைய தந்தை பெயரைச் குறிப்பிட்டுள்ளதற்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. அவர், ஏன் அப்படி எழுதினார் என்று எனக்கு தெரியவில்லை. அவர், மீது இருந்த காதலால் எல்லாவற்றையும் பொறுத்திருந்தேன். அவருக்கு அனைத்து வகையிலும் என்னுடைய தந்தை உதவியாக இருந்தார். அவர் மீது பழிச்சொல்வதில் நியாயமில்லை. அனைத்தும் கடவுளுக்கு தெரியும்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments