மியான்மரில் இராணுவ ஆதிக்கம்.. பெண்ணின் தலையில் பாய்ந்த குண்டு!
- IndiaGlitz, [Wednesday,February 10 2021]
மியான்மரில் தற்போது இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் ஆங் சாங் சூகி உட்பட அந்நாட்டின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நடைமுறை ஜனநாயகத்திற்கே பெரும் கேடாக அமையும் என்றும் இதனால் கைது செய்யப்பட்டு உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறும் மக்கள் அந்நாட்டில் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று இந்த மாதத்தின் துவக்கத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற இருந்தது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்து இருக்கிறது என்றும் அதனால் புதிய தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால் இராணுத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தற்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுதது கடந்த 5 நாட்களாக அந்நாட்டின் 30 க்கும் மேற்பட்ட நகரங்களில் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது நோபிடா எனும் இடத்தில் நடைபெற்ற இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தை கலைக்கும் வகையில் பொதுமக்கள் மீது தண்ணீர் புகை குண்டு வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் இராணுவம் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளம்பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்ததாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன.