இன்னொரு இனப்போருக்கு தயாரான மியான்மர்? இதுவரை 500 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு விவகாரத்திற்கு உலக நாடுகள் பலவும் இன்றுவரை குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் மியான்மரில் தற்போது அரங்கேறி வரும் இராணவ அராஜகத்தை எதிர்த்து அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் தற்போது கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

மியான்மரில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான ஆங் சாங் சூகி ஆதரவு பெற்ற கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்து ஒரு சில தினங்களே ஆன நிலையில் அந்நாட்டு இராணுவம் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாகக் கூறி ஆங் சாங் சூகியை வீட்டுச் சிறையில் அடைத்தது. மேலும் அந்நாட்டின் சில முக்கியத் தலைவர்களும் வீட்டுச் சிறைக்குள் இரவோடு இரவாக அடைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருக்கிறது. இதனால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு முறையான ஆட்சி அமைக்கப்படும். அதுவரை இராணுவ ஆட்சியை மியான்மரில் அமல்படுத்துகிறோம் எனக் கூறி அந்நாட்டின் இராணுவ தலைமை அதிகாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து மியான்மர் முழுவதும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தற்போது கண்காணிப்பு வளையத்திற்கு மக்கள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இதனால் தற்போது மியான்மரில் அரங்கேறி வரும் இராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாடு முழுவதும் மக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை களைப்பதற்காக இராணுவ அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பிய்ச்சி அடித்தும் வருகின்றனர். எனினும் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து அந்நாட்டு மக்கள் போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய போராட்டங்களை களைப்பதற்காக மியான்மர் நாட்டு இராணுவம் அவ்வபோது போராட்டக் காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இப்படி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை அடுத்து ஐ.நா சபை உள்ளிட்ட பல உலக நாடுகள் மியான்மர் நாட்டு இராணுவத்திற்குக் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.