2026ல் நீங்கள் தான் முதல்வர் என எனது மனைவி கூறினார்: பிரபல நடிகர் பேச்சு..!

  • IndiaGlitz, [Sunday,December 10 2023]

2026 ஆம் ஆண்டு நான் தான் முதல்வர் என எனது மனைவியை கூறியதாக பிரபல நடிகர் ஒருவர் தனது கட்சி கூட்டத்தில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டத்தில் பேசியபோது, ‘எனக்கு அரசியலில் இருந்துதான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நிலைமை இல்லை, மூன்று மகள்கள் ஒரு மகன் இருக்கும் எனக்கு, ஒரு மகளை நீ திருமணம் செய்து கொடுத்து விட்டேன், இன்னும் இரண்டு மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும், பையனை கரை சேர்க்க வேண்டும், ஆனாலும் என்னை அரசியலில் தடுப்பதற்கு யாரும் இல்லை.

என் மகனும் நீங்கள் எடுத்த காரியத்தை ஜெயிப்பீர்கள் என்று எனக்கு ஊக்கம் கொடுத்தார். மேலும் நீங்கள் நிச்சயமாக 2026ல் முதலமைச்சர் ஆவீர்கள் என்று என் மனைவி கூறினார். என் மாமியாரை நான் சமீபத்தில் சந்தித்த போது எப்போது நீங்கள் முதலமைச்சர் ஆவீர்கள்? என்று கேட்டார்.

எனவே பத்திரிகையாளர்கள் சரத்குமாருக்கு முதலமைச்சர் பதவிக்கு ஆசை வந்துவிட்டது என்று போட வேண்டாம். முதலமைச்சர் பதவி மீது யார் யாருக்கோ ஆசை வரலாம், எனக்கு வரக்கூடாதா? எனக்கு வந்தால் மட்டும் காமெடி, மற்றவர்களுக்கு வந்தால் சீரியஸா? நான் காமெடியாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம், நான் சீரியஸ் ஆக பேசி வருகிறேன் என்று கூறினார்.

மேலும் ‘என் மனசு சுத்தமாக இருக்கிறது, அதோடு உழைப்பும் இருக்கிறது, இந்த உழைப்பு, உறுதி, நியாயம், தர்மம் ஆகியவை எனக்கு இருப்பதால் எனக்கு வெற்றி நிச்சயமாக கிடைக்கும். நமது கட்சி தொண்டர்கள் இதைவிட கடுமையாக உழைத்தால் நான் சொல்லுகின்ற இலக்கை நீங்கள் அடைய முடியும், உழைத்தால் தான் எதுவும் கிடைக்கும், அதனால் நமது கட்சி தொண்டர்கள் அனைவரும் உழைக்க வேண்டும்’ என்று தொண்டர்களுக்கு நடிகர் சரத்குமார் அறிவுரை கூறினார்.