யாருடைய பட்டனால் உலகம் அழியப்போவுது? அச்சத்தில் பொதுமக்கள்
- IndiaGlitz, [Wednesday,January 03 2018]
கடந்த சில மாதங்களாகவே வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எந்த நேரத்திலும் இருநாடுகளுக்கு இடையே போர் மூளூம் அபாயம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதால் இந்த போர் இருநாடுகளுக்கான போராக மட்டும் இருக்காது, உலகின் பெரும்பகுதி அழிய காரணமாகத்தான் இந்த போர் இருக்கும்
இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களும் மாறி மாறி அணு ஆயுதங்கள் குறித்து காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வடகொரிய அதிபர் இதுகுறித்து கூறும்போது, ' உலகில் எந்த நாடுகளின் மீதும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும். குறிப்பாக அமெரிக்காவை தாக்கி முழுமையாக அழிக்க முடியும். அமெரிக்கா மீது அணு ஏவுகணை ஏவும் பட்டன் எந்த நேரமும் எனது மேஜையில்தான் உள்ளது. எனவே அமெரிக்காவால் எங்களை மிரட்ட முடியாது' என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியபோது, 'வடகொரிய அதிபர் கிம் ஜாங்- யங் தனது மேஜையில் அணு ஆயுத தாக்குதல் பட்டன் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். என்னுடைய மேசையிலும் அணு ஆயுத பட்டன் உள்ளது என்று அவரிடம் தெரிவியுங்கள். ஆனால் இது அவரது பட்டனை விட மிகப் பெரியது மட்டுமின்றி அதிக சக்தி வாய்ந்தது. உங்கள் பட்டன் மட்டுமின்றி என்னிடம் உள்ள பட்டனும் வேலை செய்யும். அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் மாறி மாறி பட்டனை அழுத்தி உலக மக்களை ஒருவழி பண்ணாமல் விடமாட்டார்கள் போல என்று தான் மற்ற நாடுகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.