என் அம்மா 27 வருஷமா பொய் சொல்லிட்டாங்க… செல்லமாக கோபப்பட்ட முக்கிய வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் முன்னணி பேட்ஸ்மேனாகவும் இருந்துவரும் கே.எல்.ராகுல் தனக்கு பெயர் சூட்டப்பட்ட நிகழ்வு குறித்து ஏற்கனவே சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 27 வருடங்களாக என் அம்மா என்னிடம் உண்மையை மறைத்துவிட்டார் என்று செல்லமாகக் கோபப்பட்டு கூறியிருக்கும் கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பெங்களூரு நகரத்தைச் சேர்ந்த கே.எல்.ராகுல் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கான கேப்டனாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் ப்ரேக்ஃபஸ்ட் வித் சாம்பியன்ஸ் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது உண்மையில் எனக்கு பெயர் வைக்கப்பட்ட கதை குறித்து கடந்த 26-27 வருஷங்களாக என் அம்மா என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார்.
அதாவது நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகையான என் அம்மா ஷாருக் தன்னுடைய பெரும்பாலான படங்களில் ராகுல் எனும் பெயருடன் நடித்திருப்பார். அதனால் உனது பெயரை ராகுல் என வைத்துவிட்டோம் எனக் கூறிக்கொண்டிருந்தார். இந்தக் கதையை நான் ஒருமுறை என் நண்பனிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அதிகமாகப் படம் பார்க்கும் பழக்கமுள்ள அவர் ஷாருக் கடந்த 1994 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தில்தான் முதல் முறையாக ராகுல் எனும் பெயருடன் நடித்திருக்கிறார். ஆனால் நீ 1992 ஆம் ஆண்டிலேயே பிறந்துவிட்டாய். இந்தக் கதையில் உண்மையே இல்லை எனக் கூறிவிட்டார்.
இதையடுத்து நான் என் பெற்றோரிடம் விசாரித்தேன். உண்மையில் சுனில் கவாஸ்கர் தனது சொந்த மகனுக்கு ரோஹன் என்று பெயர் வைத்தது பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த என்னுடைய அப்பா, “ரோஹன்“ என்ற பெயரை “ராகுல்“ எனத் தவறாகப் புரித்து கொண்டு அதேபெயரை எனக்கும் வைத்திருக்கிறார். இதை மறைக்கத்தான் எனக்கு ஷாருக்கான் கதையைச் சொல்லியிருக்கிறார்கள் என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டே நடந்ததைக் கூறியுள்ளார்.
மேலும் நான் கிரிக்கெட் விளையாடுவதால் எனது பெற்றோர் மகிழ்ச்சி அடையவே இல்லை, முன்னதாக எனக்கு ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. அப்போது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் ஏற்கனவே 4 வருடங்கள் நான் கிரிக்கெட் விளையாடி விட்டதால் என்னால் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.
மேலும் கடந்த ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில்கூட மீதமிருக்கும் தேர்வுகளை எழுதி, படிப்பை முடிக்குமாறு எனது அம்மா என்னை வற்புறுத்தினார் என்பது போன்ற பல்வேறு நிகழ்வுகளை அவர் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தத் தகவல் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout