எங்களைக் காப்பாத்துங்க… கைவிட்டு விடாதீர்கள்… மனதை உருக்கும் கிரிக்கெட் வீரர் பதிவு!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷித் கான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்றுங்கள்… கைவிட்டு விடாதீர்கள்“ என உலகத் தலைவர்களை நோக்கி உருக்கமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷித் கான் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவருடைய சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஆப்கனில் நடைபெற்று வரும் போர்ப் பதற்றம் குறித்து உருக்கமான கருத்துகளை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில் “அன்பார்ந்த உலகத் தலைவர்களே… எனது தேசம் மிகப்பெரும் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், தினந்தோறும் கொன்று குவிக்கப்படுகிறார்கள். மக்களின் வீடுகள், சொத்துகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ளார்கள். எங்களை இந்த பிரச்சனையில் கை விட்டு விடாதீர்கள். ஆஃப்கன் மக்களை கொல்வதை நிறுத்துங்கள். ஆஃப்கானிஸ்தானை அழிப்பதை விட்டுவிடுங்கள். எங்களுக்கு அமைதி தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் நாட்டில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நேட்டா படைகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் திரும்ப பெற்றுக்கொண்டார். இதையடுத்து ஆப்கனில் தாலிபான்களின் அச்சுறுத்தல் அதிகரித்து இருக்கிறது. தற்போது ஆப்கனில் உள்ள 32 மாகாணங்களில் 8 முக்கிய மாகணங்களின் தலைநகரை தாலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் இதனால் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை எதிர்த்து ஆப்கன் இராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் தாலிபான்கள், ஆப்கன் இராணுவம் என இருபெரும் துப்பாக்கிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்து வரும் அவலம் நடைபெற்று வருகிறது. மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து தவித்துவரும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டதை குறித்து தான் வருத்தம் கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய இக்கட்டான சூழலுக்கு மத்தியில்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்றுங்கள், கைவிட்டு விடாதீர்கள் என உலகத் தலைவர்களை நோக்கி கோரிக்கை வைத்திருக்கிறார். ரஷித் கானின் உருக்கமான இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.