கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஐபிஎல் போட்டிகள் 2021 சென்னையில் நடைபெற்று வருகின்றன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் சென்னையில் தங்கியுள்ளார்.

மேலும் நேற்றுமுன்தினம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான பலப்பரிட்சை நடைபெற்றது. இந்தப் போட்டி முடிந்த நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதையடுத்து சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் முத்தையா முரளிதரனுக்கு இதய ரத்தநாள அடைப்பை சரி செய்யும் “ஆஞ்சியோ பிளாஸ்டிக்” சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது என்றும் தற்போது அவர் உடல் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய மனைவி மதிமலர் ராமமூர்த்தி சென்னையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்த அவர் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் 350 ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “800” எனும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார் என்பதும் பின்னர் ரசிகர்கள் வெளியிட்ட அதிருப்தி காரணமாக இந்தப் படத்தில் இருந்து அவர் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் இவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து ரசிகர்களும் விரைவில் குணமாகி மீண்டும் பணியைத் தொடங்க வேண்டும் என வாழ்த்து வெளியிட்டு வருகின்றனர்.