வாசிப்பு திருவிழா… தமிழில் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்கள்!
- IndiaGlitz, [Friday,December 31 2021]
சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 6 துவங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வார நாட்களில் மதியம் 3-இரவு 8.30 வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் மற்றவர்களுக்கு ரூ.10 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழில் படிக்க வேண்டிய அற்புதமான படைப்புகள்
1.அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்“: கி.பி. 1000 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்த சோழப்பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். சோழப்பேரசின் ஆட்சியை சிறிது கற்பனை கலந்து எழுதப்பட்ட அற்புதமான படைப்பு.
2. ப. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோனி“: சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கில் பல்வேறு கதைக்கருக்கள் தோன்றி, வளர்ந்து, மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும் ஒரு அற்புதமான படைப்பு.
3. சுந்தர ராமசாமயின் “ஒரு புளியமரத்தின் கதை“: நவீன செவ்வியல் புனைவு நாவல் .
4. கி.ராஜநாராயணன் எழுதிய “கோபல்ல கிராமம்“: கிராமிய மொழிநடையும் இடையிடையே புரியாத கிராமியச் சொற்கள் பயன்படுத்தி எழுதப்பட்ட சுவாரசியமான கதைத் தொகுப்பு.
5. சாண்டில்யன் எழுதிய “கடல் புறா“: விசய நாட்டில் இருந்து உதவித்தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவும் கதைப்பகுதியைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல்.
6.தி.ஜானகிராமன் எழுதிய “மோகமுள்“: மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுத்தப்பட்டு உள்ள புத்தகம். சங்கீத விஷயத்தின் மூலம் நாவலில் ஏற்படுகிற ஒரு ஆழம் உண்மையானதாக உயர்வானதாக அமைந்துள்ளது.
7. சுந்தர ராமசாமி எழுதிய “ஜேஜே சில குறிப்புகள்“: மலையாளக் கலாச்சாரப் பின்னணியில் தமிழ்க் கலாச்சாரம் பற்றியும் தமிழ் வாழ்வின் சாரம் பற்றியும் விமர்சனத்தை முன்வைக்கும் நாவல்
8.அமரர் கல்கி எழுதிய “சிவகாமியின் சபதம்“: பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் அதிஅற்புத காவியம். சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்த்தொடுத்ததைப் பற்றிய வரலாற்று நாவல்.
9.அமரர் கல்கி எழுதிய “அலை ஓசை“: சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின்போது பொது மக்களின் மனநிலை குறித்து எழுதப்பட்ட நாவல். சாகித்ய அகாடமி விருதுபெற்றது.
10. பாலகுமாரன் எழுதிய “உடையார்“: ராஜராஜ சோழன் ஆட்சிசெய்த விதத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டது.