திருப்பதி அருகே பாலாஜி கோவிலில் அர்ச்சனை செய்யும் இஸ்லாமியர்கள்
- IndiaGlitz, [Thursday,March 30 2017]
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து 120 கிமீ தூரத்தில் உள்ள கடப்பா பகுதியில் உள்ள பாலாஜி கோவில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கி வருகிறது.
நாடு முழுவதும் இந்து-முஸ்லீம் பிரச்சனைகள் ஆங்காங்கே எழுந்து வரும் நிலையில் இந்த கோவிலில் நேற்று அதாவது தெலுங்கு புத்தாண்டு தினத்தில் பெண்கள் உள்பட இஸ்லாமியர்கள் பாலாஜி கோவிலுக்கு தேங்காய் பழத்துடன் வந்து அர்ச்சனை செய்த காட்சியை காண முடிந்தது.
இந்த கோவிலில் வீற்றிருக்கும் பாலாஜி, மாலிக் கஃபூர் என்பவரின் மகளான பிபி என்ற முஸ்லீம் பெண்ணை கடந்த 1311ஆம் ஆண்டு திருமணம் செய்ததாக இந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.
தெலுங்கு புத்தாண்டு தினத்தில் சுத்தமாக குளித்து, அசைவ உணவுகளை தவிர்க்கும் இஸ்லாமியர்கள் அன்றைய தினம் பாலாஜி கோவிலுக்கு சென்று வழிபடுவதை பல ஆண்டுகளாக ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்து-முஸ்லீம் என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. எங்களது முன்னோர்கள் பல ஆண்டுகளாக இந்த நாளில் பாலாஜியை வணங்கி வந்ததால் நாங்களும் அதை தொடர்ந்து வருகிறோம், இனிமேலும் தொடர்வோம் என்று இஸ்லாமிய பக்தர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.