மதம் கடந்த மனிதம்… இந்து கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாகக் கொடுத்த இஸ்லாமியர்!!!

  • IndiaGlitz, [Thursday,December 10 2020]

 

மதம் ஒருவேளை மனிதனைக் கட்டிப்போட்டாலும் மனிதம் எப்போதும் பரந்துபட்டதாகவே இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் பெங்களூரூ பகுதியைச் சேர்ந்த பாஷா. பெங்களூரின் ஹோஸ்கோட் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாஷா தன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியை தானாகவே முன்வந்து நன்கொடையாக வழங்கி உள்ளார். இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வலகரேபுரா எனும் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் பாஷாவிற்கு சொந்தமான நிலம் இருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் சாமியை தரிசனம் செய்வதை பார்த்த பாஷா தாமாக முன்வந்து கோவிலை புணரமைப்பதற்கு வேண்டிய நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி இருக்கிறார். இதனால் மகிழ்ந்த கோவில் நிர்வாகம் தற்போது அப்பகுதியில் புணரமைப்பு பணிகளைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையல் பாஷா ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழங்கிய நிலத்தின் மதிப்பு சுமார் 80 லட்சத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. 1.5 குண்டாஸ் அளவுள்ள நிலத்தை பாஷா தாமாக முன்வந்த இந்து கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அவருக்கு நேரில் சென்று நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.