'பள்ளிப்பருவத்திலேயே: பிரபல இசையமைப்பாளரின் மகன் ஹீரோவாகும் படம்

  • IndiaGlitz, [Friday,May 05 2017]

கடந்த 90ஆம் ஆண்டுகளில் உள்ள அள்ளித்தந்த பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் சிற்பி. இவரது இசையில் உருவான நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்கொடி, உன்னை நினைத்து போன்ற பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றன. இந்த நிலையில் இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் தற்போது 'பள்ளிப்பருவத்திலேயே என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார்.

இசையமைப்பாளரின் மகனாக இருந்தாலும் தந்தையின் பெயரை பயன்படுத்த விரும்பாமல் முறைப்படி நடிப்பு உள்பட திரைப்பட ஹீரோவுக்கு உரிய அனைத்து பயிற்சிகளையும் பெற்று தற்போது ஹீரோவாகியுள்ளார். தனுஷூக்கு ஒரு 'துள்ளுவதோ இளமை' போல நந்தன்ராமுக்கு ஒரு 'பள்ளிப்பருவத்திலேயே' என்று கூறப்படும் அளவுக்கு இந்த படத்தில் அழுத்தமான பள்ளிப்பருவத்து கதை உள்ளதாம்

இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர், தனது பள்ளிக்கால பசுமையான நினைவுகளை சுவாரஸ்யமான கதையாக்கி அதற்கு திரை வடிவம் கொடுத்திருக்கிறார். படம் பார்க்கும் எல்லோரும் தனது பள்ளிப்பருவ நினைவுகளுக்கும் பள்ளி நண்பர்கள் பற்றிய நினைவுகளுக்கும் ஒரு நிமிடமாவது சென்று வரும்படி படத்தை ஜீவனுடன் அவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பள்ளித்தலைமை ஆசிரியர் கேரக்டரில் கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ஊர்வசி, தம்பி இராமையா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, 'பருத்தி வீரன்' சுஜாதா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 'கற்றது தமிழ்' படத்தில் சிறு வயது அஞ்சலியாக நடித்து பெயர் பெற்ற வெண்பா இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்களுடன் பணியாற்றிய விஜயன் இசையமைக்க, இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இந்த படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.