பணம் என்றால் எல்லாருமே பேய்கள்தான்! பண்பாட்டில் உயர்ந்ததாம் இந்த தேசம்.. பிரபல இசையமைப்பாளர் ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வீழ்த்தியது என எதிர்கட்சிகள் குற்றம் காட்டி வரும் நிலையில் இந்த தேர்தல் குறித்து அவர் கூறி இருப்பதாவது:
இடைத்தேர்தலோ பொதுத்தேர்தலோ, தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கைகள் அரிக்கத் தொடங்கி விடுகின்றன பல நேர்மையற்ற வாக்காளர்களுக்கு.பணத்துக்கு பேயாய் அலையும் அசிங்கம் பிடித்த ஆன்மாக்கள் தங்கள் வாசற்கதவைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றன ஒவ்வொரு கட்சியின் வரவிற்கும். இதில் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் கிண்டலடிக்கிற கருத்துகளுக்கும், கேலிச்சித்திரங்களுக்கும் பஞ்சமில்லை, என்னவோ இவர்களெல்லாம் யோக்கியர் போல!
எனக்குத் தெரிந்து முந்தையத் தேர்தல்களில் படித்த சில நண்பர்களே வாங்கிவிட்டு அதைப் பெருமையாகவும் என்னிடம் சொல்லியபோது அவர்கள் மேல் அப்படி ஒரு வெறுப்பு வந்தது. சொந்தத் தொழில் செய்கிற வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பணம் என்றவுடன் எப்படி அலைகிறார்கள். தங்கள் தன்மானத்தையும், உத்தமத்தையும், நேர்மையையும் இழக்கிற இவர்கள் கற்றுவைத்திருக்கிற ஒரு வியாக்கியானம் – “அவன் என்ன அவன் சொந்தக் காசையாத் தர்றான்? திருட்டுக்காசுதான.. நம்ம பணந்தான?”
அப்படியென்றால் ஏன் திருட்டுத்தனமாக வாங்குகிறீர்கள்? வெளியில் சொல்லுங்கள் பார்ப்போம்! அவன் செய்கிற தவற்றுக்கு, குற்றத்துக்கு சட்டத்துக்கோ, மனச்சான்றுக்கோ அவன் பதில் சொல்லிக்கொள்ளட்டும். நீயும் அதில் பங்குகொண்டு விட்டு எப்படி அதை நியாயப்படுத்த முடியும்? இது திருட்டுத்தனம், சட்டவிரோதம் என்பது தெரிந்துதானே அதைச் செய்கிறாய்?இப்படி அப்பட்டமானத் தவறுகளைச் செய்துவிட்டு எப்படி அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல முடியும்?
உங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது? குடம், தட்டு, குத்துவிளக்கு என ஓடி ஓடி வாங்கி வைத்துக்கொண்டு எத்தனை தாய்மார்கள் இதை அக்கம்பக்கத்தாரோடு பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள்? இவர்கள் பிள்ளைகள் என்ன லட்சணத்தில் வளரும்? சட்டவிரோதமானப் பணமோ, குற்றவழி வந்தப் பணமோ.. பணம் வருகிறதென்றால் ஏழ்மை, வசதி, படிப்பு, படிப்பின்மை என்று எந்த பேதமும் இல்லை. எல்லாருமே பேய்கள்தான்! பண்பாட்டில் உயர்ந்ததாம் இந்த தேசம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments