நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஒரு இசையமைப்பாளரின் ஆதங்கம்!
- IndiaGlitz, [Wednesday,April 17 2019]
'என்னை தெரியுமா', 'மாலை பொழுதின் மயக்கத்திலே', 'அப்பாவின் மீசை', 'உறுமீன்', 'கோலி சோடா 2' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் அச்சுமணி. தற்போது நடிகை வரலட்சுமி நடித்து வரும் 'வெல்வெட் நகரம்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலான 'சின்னஞ்சிறு கிளியே' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த பாடல் வெளியானதே பலருக்கு தெரியவில்லை என்பதால் இந்த பாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை அவர் செய்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள டுவீட் இதுதான்:
ரசிகர்களுக்காக இதுவரை கேட்டிராத வகையில் ஒரு பாடலை தருவது முக்கியமல்ல. அந்தப் பாடல் மக்களிடம் சென்றடையவில்லை என்றால் அது என் தவறா என்று தெரியவில்லை. சின்னஞ்சிறு கிளியே பாடல் கேட்டவர்கள் அனைவருக்கும் அது பிடித்தது. உங்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
தொடர்ந்து என் மீது அன்பு செலுத்தி ஆதரித்து வரும் திங்க் மியூஸிக் இந்தியாவுக்கு நன்றி. இந்தப் பாடல் வெளிவந்ததில் எனக்கும் இயக்குநர் மனோஜுக்கும் மகிழ்ச்சி. பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டும் தான் கவனம் கிடைக்கும் என நினைக்கிறேன். ஊடகத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு என் போன்றவர்களை ஆதரிக்க மனமோ, விருப்பமோ இருப்பதில்லை.
என்னைப் போன்றவர்கள் எப்போதும் தொடர்ந்து போட்டியிடுபவர்களாக, குறைவாக மதிப்பிடப்படுபர்களாக மட்டுமே இருப்போம். பாடலைக் கேட்டு ட்வீட் செய்த ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் நன்றி. இது மிகப்பெரிய விஷயம்.
நான் இதுவரை இது போல எப்போதும் பேசியதில்லை. ஆனால் இது அதற்கான நேரம். என்னையும், என் இசையையும் தெரிந்தவர்களுக்கு, நான் எவ்வளவு தனித்து விடப்பட்டுள்ளேன் என்பது தெரியும். நமது படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதபோது அது வலியைத் தரும்தான். ஆனால் இது என்னை நிறுத்தாது. மாறாக என்ன இன்னும் ஊக்குவிக்கத்தான் செய்யும்.
நான் எப்போதும் எனது சிறந்த முயற்சியைத் தருகிறேன். அதை என்றும் தொடருவேன். அவ்வளவுதான்.
இவ்வாறு இசையமைப்பாளர் அச்சுமணி தெரிவித்துள்ளார்.