மத்தியப் பிரதேசத்தில் இருந்து எம்.பி பதவிக்குப் போட்டியிடும் பா.ஜ.க. எல்.முருகன்!
- IndiaGlitz, [Saturday,September 18 2021]
மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக டாக்டர் எல்.முருகனை பா.ஜ.க தலைமை அறிவித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகனுக்குச் சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மீன்வளம் தகவல் மற்றும் ஒளிபரப்பு கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக பொறுப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஒருவர் மத்திய அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குறைந்தது 6 மாதத்திற்குள் எம்.பியாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை எம்.பி தொகுதிகளுக்கு திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால் அங்கும் முயற்சி நடைபெற்றது.
ஆனால் என்ஆர்ஐ காங்கிரஸ் ஆதிக்கம் காரணமாக அதுவும் இயலாத நிலையில் தற்போது மத்தியப் பிரதேசத்தில் இருந்து எல்.முருகன் மாநிலங்களவைக்குப் போட்டியிடுகிறார். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய இந்தப் பதவிக்கு 22 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் 23 ஆம் தேதி மறுபரிசீலனை செய்து, தேர்தல் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.