அடுக்குமாடி குடியிருப்பில் மாதக்கணக்கில் பிணமாக இருந்த பெண்: அதிர்ச்சியில் மகன்

  • IndiaGlitz, [Tuesday,August 08 2017]

பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவர்கள் பக்கத்து வீட்டில் யார் இருக்கின்றார்கள், அவர்கள் பெயர் என்னவென்று கூட தெரியாமல் வருடக்கணக்கில் வாழும் கலாச்சாரம் பெருகி வருகிறது. பக்கத்து வீட்டில் தனியாக இருக்கும் ஒருவர் மரணம் அடைந்தால் கூட, பல நாட்கள் கழித்து துர்நாற்றம் வைத்தே கண்டுபிடிக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒரு பெண், இயற்கை மரணமாகி மாதக்கணக்கில் ஆன பின்னரே தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த 63 வயது ஆஷா என்பவர் கடந்த நான்கு வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவரது ஒரே மகன் ருத்துராஜ் அமெரிக்காவில் இருப்பதாலும் இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாலும் தனியாகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் அமெரிக்காவில் உள்ள ஆஷாவின் மகன் ருத்துராஜ், தனது தாயாரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மும்பை வந்த ருத்துராஜ் வீட்டின் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது ருத்துராஜின் தாயார் படுக்கையில் எலும்புக்கூடாக இருந்தார். அவர் மரணம் அடைந்து பல மாதங்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிகிறது.
கிராமங்களில் பக்கத்து வீட்டில் ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் ஆறுதல் கூற ஆட்கள் இருப்பார்கள். ஆனால் நகரங்களில் குறைந்தபட்சம் அறிமுகம் கூட இல்லாமல் இருப்பதே இதுபோன்ற துயரமான முடிவுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.