காதலர் தினம் கொண்டாட கோவா சென்ற காதல் ஜோடிக்கு பரிதாப முடிவு..!
- IndiaGlitz, [Wednesday,February 15 2023]
நேற்று உலகம் முழுவதும் காதலர்கள் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய நிலையில் மும்பையை சேர்ந்த காதல் ஜோடி காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற நிலையில் அங்கு அவர்களுக்கு பரிதாபமான முடிவு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 27 வயது விபு சர்மா என்பவரும் பெங்களூரில் பணிபுரியும் சுப்ரியா துபே என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்றுள்ள நிலையில் அங்கு பலோலம் என்ற கடற்கரைக்கு அருகில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இரவு உணவுக்கு பின்னர் அவர்கள் கடற்கரையில் குளிக்க சென்றதாகவும் அப்போது திடீரென அவர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மறுநாள் காலை 7 மணி அளவில் அருகே கடற்கரை பகுதியில் சுப்ரியா சடலமும் அதன் பிறகு மதியம் அதே இடத்தில் விபு சர்மாவின் சரளமும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை செய்த போது இரவு உணவுக்கு பின் இருவரும் கடலுக்கு சென்றார்கள் என்றும் அதன் பிறகு அவர்கள் திரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த மரணத்தில் குற்றம் ஏதும் நிகழவில்லை என்றும் கடல் நீரில் மூழ்கி இருவரும் இறந்ததிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.