பாலியல் புகார் கொடுத்த 18 வயது பெண்ணிடம் சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதி: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Saturday,August 15 2020]
இளைஞர் மீது பாலியல் புகார் கொடுத்த 18 வயது இளம் பெண்ணிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் தான் ஒரு இளைஞரை காதலித்ததாகவும் இருவரும் நெருக்கமாக பழகியதாகவும் அப்போது அந்த இளைஞர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகார் கொடுத்த இளம்பெண்ணிடம் ’இருவரும் நெருக்கமாக இருந்தபோது ஒன்றும் தெரியவில்லையா? உறவு கசந்து போனதும்தான் புகார் தர வேண்டுமா? இரண்டு பேரும் உறவில் நெருக்கமாக இருந்த போது ஏன் புகார் தரவில்லை? என்று நீதிபதி சரமாரியாக கேள்வி கேட்டார்.
மேலும் தற்போதைய இளைஞர்களுக்கு எல்லாமே அவசரம் என்றும், பக்குவம் இல்லாமல் இருப்பதால் இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், உடல்ரீதியான பாதிப்பு மட்டுமே பதிவாகி உள்ளது என்றும் இருவருமே வயதுக்கு மீறிய வேகத்தை காட்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இருவரின் உறவு சமூகமாகவே இருந்து உள்ளது என்றும் உறவு கசந்து பின்னரே புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதி, இளைஞரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து இளைஞர் மீது தவறு இருந்தால் அவர் மீது போக்சோ சட்டத்தின்படி கைது செய்யலாம் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் புகார் கொடுத்த 18 வயது இளம் பெண்ணிடம் நீதிபதி ஒருவர் சரமாரியாக கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.