அஸ்வினை தட்டித்தூக்க நினைக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி… என்ன காரணம்?

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை மும்பை இந்தியன்ஸ் அணி அதிக விலை கொடுத்து வாங்க விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு சென்னை சிஎஸ்கே அணி மற்றும் டெல்லி கேப்பிடள்ஸ் அணிக்காக விளையாடிய இவரை மும்பை இந்தியன் விரும்ப என்ன காரணம் என்பதே ரசிகர்களுக்கு தற்போது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 4 வருடங்களாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் இருந்துவந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் டி20 உலகக்கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிகளில் கலந்துகொண்டு மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். கூடவே ஐபிஎல் போட்டிகளில் அதிக அனுபவம் உள்ளவர். இதனால் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி இவருக்கு 7 கோடி வரை செலவு செய்ய இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேப்டன்சியும் நன்றாகவே தெரியும். அதனால் அணி சோர்ந்து போகும் நேரத்தில் இவரால் வழிநடத்த முடியும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக இந்த அணியில் ராகுல் சாகர், குல்தீப் யாதவ் என 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்த நிலையில் தற்போது ராகுல் சாகரை மட்டும் அந்த அணி ஏலத்தில் எடுக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

15 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் 12, 13 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரோஹிர் சர்மா (16 கோடி), பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கிரன் பொல்லார்ட் (6 கோடி) என 4 வீரர்களைத் தக்க வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள 48 கோடியில் 17 வீரர்களை ஏலத்தில் எடுக்கவிருக்கிறது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 7 கோடி வரை ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த அஸ்வின் அணி தடைப்பட்டபோது பூனே அணிக்காகவும் பின்னர் பஞ்சாப் கிங் அணிக்காகவும் கடந்த 2020இல் டெல்லி அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். இதனால் இவரை மற்ற அணிகளும் ஏலத்தில் எடுக்க முயற்சிக்கலாம். அதேபோல புதிய அணியான அகமதாபாத் அணியும் இவர் ஏலத்தில் எடுக்க முயற்சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.