மும்பை: கடந்த இரண்டு வாரங்களில் 4 மடங்காக அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்!!!
- IndiaGlitz, [Tuesday,June 02 2020]
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. மும்பையில் கடந்த இரண்டு வாரங்களில் 4 மடங்காக உயிரிழப்புகள் அதிகரித்து இருப்பதாக இந்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
மும்பை நகரில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. மே 15 ஆம் தேதியில் 123 ஆக இருந்த கொரோனா உயிரிழப்பு தற்போது 473 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் வணிக நிறுவனங்கள் மற்றும் மால்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன. மருத்துவ மனைகளின் பற்றாக்குறையே இத்தகைய உயிரிழப்புகளுக்கு காரணம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மும்பையை அடுத்து டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் முதலே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மே 31 ஆம் தேதி உயர்ந்த பட்சமாக 1,295 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் கடந்த ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியிருக்கின்றன.
ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5610 ஆக உயர்ந்து இருக்கிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்து வரும் மகாராஷ்டிராவில் நோய்த்தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இருந்து வருகின்றன.