தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: நூலிழையில் உயிர் தப்பிய நடிகை ராதிகா
- IndiaGlitz, [Sunday,April 21 2019]
இலங்கையில் இன்று ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் அந்நாட்டில் உள்ள இரண்டு தேவாலயங்கள் மற்றும் நான்கு ஹோட்டல்களில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், இந்த குண்டுவெடிப்பில் 100க்கும் அதிகமானோர் பலியானதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பில் நூலிழையில் நடிகை ராதிகா உயிர் தப்பியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகை ராதிகா இன்று குண்டுவெடித்துள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அவர் இலங்கையில் தங்கியிருந்த ஓட்டலிலும் இன்று குண்டு வெடித்துள்ளது. நல்லவேளையாக அவர் இந்தியாவுக்கு திரும்பிவிட்டதால் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் அவரது சகோதர், அவரது குடும்பம், உறவினர்கள் அனைவரும் அந்த ஓட்டலில் தங்கியிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். மேலும் ஈஸ்டர் தினத்தன்று இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் அமைதி திரும்பிய நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இலங்கையில் உள்ள கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், கிங்ஸ்பெரி சர்ச், பட்டிக்கலாவ் சர்ச் ஆகிய சர்ச்களிலும், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல் ஆகிய இடங்களிலும் குண்டுவெடித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.