சுதந்திரத்துக்கு பின் CAA-க்கு எதிராக டெல்லியில் நடந்த சர்வ தர்மா சமா பவா...! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
- IndiaGlitz, [Monday,January 13 2020]
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்கள் கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டன.
உயிரிழப்பு, படுகாயம், கண்ணீர்ப் புகைக்குண்டுவீச்சு, தடியடி, பொதுச் சொத்துகளுக்கு சேதம், வாகனங்களுக்குத் தீவைப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்தன. இவை அனைத்தும் தற்போதுதான் சற்று ஓய்ந்துள்ளது. அதற்குள், நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு, போராட்டம் நடத்திய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்தப் பகுதியில், கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஆனால், நேற்று ‘சர்வ தர்ம சமா பவா’ (அனைத்து மதத்தினருக்கும் ஒரே கொள்கை) என்ற பல மதங்களின் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள், குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தங்கள் குரலைப் பதிவுசெய்துள்ளனர்.
நேற்றைய கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சாசி தரூர் கலந்து கொண்டார் இதில் இந்துக்கள் யாகம் நடத்தினர், சீக்கியர்கள் கிர்தான் (இசை, பாடல் மூலம் இறைவனை வழிப்படுதல்) செய்தனர். அதேபோல், அனைத்து மதத்தினரும் தங்கள் முறைகளில் இறைவனை வழிபட்டு குடியுரிமை சட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இறுதியாக, அனைவரும் இணைந்து அரசியலமைப்பின் முன்னுரையைப் படித்து, நாட்டின் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
‘சர்வ தர்ம சமா பவா’ என்ற போராட்ட பிரார்த்தனைக் கூட்டம், முன்னதாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின்போது பல இடங்களில் நடைபெற்றது. மகாத்மா காந்தி, இந்தப் போராட்டத்தை அனைத்து இடங்களிலும் பரப்பினார்.