மதுரையில் 1.10 லட்சம் அளவிலான கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு… தமிழக முதல்வர் அதிரடி திட்டம்!!!
- IndiaGlitz, [Friday,December 04 2020]
மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதனால் 1.10 லட்சம் அளவிலான கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் இத்திட்டம் வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது.
அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.1,295 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டம் 4 தவணைகளாக முடிக்கப்பட உள்ளது. அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த விழாவின்போது ரூ.69 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டப்பணிகளையும் அவர் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முத்திரை பதித்து வருகிறது. குடிநீர் பிரச்சனைக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாகக் கொண்டு அரசை விமர்சிக்கிறார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் விநியோகத் திட்டம் 2023 இல் நிறைவு பெறும்.
புதிய திட்டத்தால் மதுரையில் 1.10 லட்சம் அளவிலான கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.