உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் ஆச்சரியத்தக்க முன்னேற்றம்!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்த சில வாரங்களுக்கு 10வது இடத்திற்கு இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஒருசில நாட்களில் பங்குச்சந்தை மேதை வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 8வது இடத்தை பிடித்தார். அதன்பின் மீண்டும் சில நாட்களில் 6வது இடத்தில் இருந்த எலோன் மஸ்க் மற்றும் 7வது இடத்தில் இருந்த கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஆகியோர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு 6வது இடத்தை பிடித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் முகேஷ் அம்பானி உலக கோடீஸ்வரர் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துவிட்டார். தற்போது அவருக்கு முன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசொஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மூவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை முகேஷ் அம்பானி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு செய்ததால் அவரது நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து வருவதால் உலக பணக்காரர் பட்டியலில் அவரது இடமும் முன்னேறி கொண்டே வருகிறது. முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 80.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.